ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அளித்துள்ள புகாரில், “நானும், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வருகிறோம். எங்களுடைய காதல், என்னுடைய காதலியின் பெற்றோருக்குத் தெரிய வந்தது. அதனால், எங்களைப் பிரிப்பதற்கான முயற்சியில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தெரிந்துகொண்ட நாங்கள் இருவரும் டெல்லிக்குச் சென்று தங்கினோம்.
இதனையடுத்து, என்னுடைய காதலியின் பெற்றோர் காவல் நிலையத்தில் என்மீது கடத்தல் புகார் அளித்தனர். புகார் அளித்த விஷயம் தெரியவந்ததும், நாங்கள் இருவரும் காவல் நிலையத்திற்குச் சென்று எங்களுடைய நிலைமையை தெரிவித்தோம்.
ஆனால், அந்த காவல் நிலையத்தில் என் காதலியின் உறவினர் முன்னிலையில் எங்களை அடித்துத் துன்புறுத்தினர். அதன்பின், என் காதலியை உத்தரப்பிரதேசத்திற்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து குடும்பத்திற்குத் தெரியாமல் என்னுடைய காதலி தொலைபேசி மூலம் பேசினார். இதனால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஆகையால், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றம், மனுதாரரின் காதலியை அடுத்த விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு காவல் துறையினருக்கு ஆணை பிறப்பித்துள்ளது.