டெல்லி ஜஹாங்கிர்புரியில் இன்று ஆக்கிரமிப்புகளை இடிக்கும் நடவடிக்கையின் போது, தனது வீடு இடிபடுவதை பார்த்து பெண் ஒருவர் கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
டெல்லியின் ஜஹாங்கிர்புரிய பகுதியில் வடக்கு டெல்லி நகராட்சி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் இன்று ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன. அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது கலவரம் நடந்த பகுதி என்பதால் அரசின் இந்த நடவடிக்கையானது அரசியல் ரீதியிலானது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கு புல்டவுசர்களுடன் சென்று அரசு அதிகாரிகள் வீடுகளையும், கடைகளையும் தரைமட்டமாக்கியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் தலையீட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அபலைப் பெண் கண்ணீர்
இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்பு இடிப்பு நடவடிக்கையின் போது ஜஹாங்கிர்புரியில் சிறிய வீடு ஒன்று இடிக்கப்பட்டது. அப்போது தனது வீடு இடிந்து கிடப்பதையும், அதில் இருந்த உடைமைகள் குப்பைகளை போல ஜேசிபி இயந்திரம் அள்ளி லாரியில் போடுவதையும் பார்த்து பெண் ஒருவர் கதறி அழுதார்.
"வீட்டை தான் இடித்துவிட்டீர்கள்; எங்கள் உடைமைகளையாவது விட்டு விடுங்கள்" என அந்தப் பெண் கெஞ்சுவது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.