புதிய நிதியாண்டு தொடங்கவுள்ள நிலையில், சமையல் எரிவாயு முதல் கார் வரை பல்வேறு பொருட்களின் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. தேசிய அளவில் பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலையை உயர்த்த வேண்டும் என மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து அந்த பட்டியலில் உள்ள 850 மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நாளை முதல் வலி நிவாரணிகள், தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகளின் விலை 10.7 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அதே போல், நாடு முழுவதும் சுங்கக் கட்டணமும் உயர்கிறது. குறிப்பாக தமிழகத்தில் சுங்கக் கட்டணம் 5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.
வாகன தயாரிப்புக்கான உருக்கு, அலுமினியம், பிற உலோகங்கள், கச்சா பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால், நாளை முதல் வாகனங்களின் விலையை உயர்த்தப் போவதாக கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டோயோட்டா கார் நிறுவனம் 4 சதவிகிதம் வரையும், பிஎம்டபிள்யூ நிறுவனம் மூன்றரை சதவிகிதம் வரையும் தங்களது கார்களின் விலையை உயர்த்தப் போவதாக தெரிவித்துள்ளன. அதே போல் இருசக்கர வாகன விற்பனையில் கொடி கட்டி பறக்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் வரும் 5 ஆம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் 50 ரூபாய் உயர்ந்தது. இந்தச் சூழலில் நாளை முதல் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படவுள்ளது.
வீடு கட்டும் எளிய மக்களின் கனவும் வரும் ஏப்ரல் மாதம் முதல் சிக்கலாக போகிறது. ஏனெனில் வீடு வாங்குவோருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வரி சலுகைகளை மத்திய அரசு நிறுத்தவுள்ளது.
மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் மீது நாளை முதல் 30 சதவிகித வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. இதனால் விடிஏ எனப்படும் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் அல்லது கிரிப்டோ கரன்சிகளை வாங்குவதிலும் மக்களுக்கு சிரமம் ஏற்படும்.
இதையும் படிக்க: "பெட்ரோல், டீசலுக்காக மக்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்" -நிர்மலா சீதாராமன்