கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் விதான் சவுதாவை சுற்றி 2 கிலோமீட்டர் தூரத்திற்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின், 16 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் அளித்தனர். அதனை கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து தங்கள் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்ளும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி 15 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
ஆனால் அவ்வாறு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது குறித்து எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியது.
அதன்படி கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு 11மணிக்கு தொடங்க உள்ளதால் கர்நாடக சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்கள் வரத்தொடங்கியுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூரு விதான் சவுதாவை சுற்றி 2 கிலோமீட்டர் தூரத்திற்கு 144 தடை விதித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.