மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் இரண்டரை மாத சிறுமியை அவரது பெற்றோர் தொலைதூர உறவினர்களுக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் தாய் வீட்டு வேலை செய்பவர். தந்தை கூலி தொழிலாளி. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 மாதமாக இருவரும் வேலை இன்றி தவித்துள்ளனர். மேலும் வருமானத்திற்கும் வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஹவுராவில் அமைந்துள்ள அவர்களது உறவினர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு தனது இரண்டரை மாத குழந்தையை விற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் மற்றும் சைல்டு லைன் உறுப்பினர்கள் உறவினர்களின் வீட்டில் இருந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் குழந்தையின் பெற்றோர், பாபன் தாரா மற்றும் தபசி என அடையாளம் காணப்பட்டனர். நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.