சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியுள்ள குஜராத்தில், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் ராஜினாமா செய்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி நீண்ட நாட்கள் நடைபெற்ற பட்டிதர் சமூகத்தினரின் போராட்டத்தின் முகமாக அறியப்பட்டவர் ஹர்திக் படேல். 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாநில கட்சிப் பிரிவின் செயல் தலைவராக பணியாற்றி வரும் அவர் கடந்த மாத தொடக்கத்தில், மாநிலக் கட்சித் தலைமை தன்னை ஓரங்கட்டுவதாக குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் பாஜகவை புகழ்ந்து பேசியது அவர் கட்சியில் ஓரங்கட்டப்பட காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க பாஜக வலிமையுடன் இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் குஜராத்தில் வலிமை பெற விரும்பினால் முடிவெடுக்கும் திறன் மற்றும் முடிவெடுக்கும் சக்தியை மேம்படுத்த வேண்டும் என்று படேல் கூறினார்.
மாநில காங்கிரஸ் கட்சியின் எந்தக் கூட்டத்திற்கும் தனக்கு அழைப்பு இல்லை என்றும், முடிவுகளை எடுப்பதற்கு முன்பு தன்னிடம் ஆலோசனை கேட்பதில்லை என்றும் அவர் கூறினார். "கட்சியில் எனது நிலை, நஸ்பந்தி (வாசெக்டமி) செய்து கொள்ளப்பட்ட ஒரு புது மாப்பிள்ளை" என்று அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். இந்நிலையில் மாநில கட்சிப் பிரிவின் செயல் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹர்திக் படேல் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “குஜராத்தில் உள்ள காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மாநில பிரச்சினைகளில் இருந்து வெகு தொலைவில் உள்ளனர், ஆனால் டெல்லியில் இருந்து வந்துள்ள தலைவர்களுக்கு சிக்கன் சாண்ட்விச் வழங்குவதை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். நான் மூத்த தலைமையைச் சந்திக்கும் போதெல்லாம், குஜராத் மக்கள் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றிக் கேட்பதில் அவர்கள் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை என்று நான் எப்போதும் உணர்ந்தேன். இந்த ராஜினாமாவிற்கு பிறகு, நான் உண்மையிலேயே எங்கள் மாநில மக்களுக்கு சாதகமாக பணியாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் கோட்டையும், பிரதமர் நரேந்திர மோடியின் கோட்டையுமான குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், படேலின் விலகல் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.