'ரூ.437 கோடியில்லை.. ரூ.43 கோடிதான்' - வன்முறை சேதத்தில் குழப்பிய விஸ்ட்ரான் நிறுவனம்!

'ரூ.437 கோடியில்லை.. ரூ.43 கோடிதான்' - வன்முறை சேதத்தில் குழப்பிய விஸ்ட்ரான் நிறுவனம்!
'ரூ.437 கோடியில்லை.. ரூ.43 கோடிதான்' - வன்முறை சேதத்தில் குழப்பிய விஸ்ட்ரான் நிறுவனம்!
Published on

தொழிலாளர் நடத்திய வன்முறையில் ஏற்பட்ட சேதத்தின் அளவை ரூ.437 கோடியில் இருந்து ரூ.43 கோடியாக விஸ்ட்ரான் நிறுவனம் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் நரசபுரா நகரில், தைவானைச் சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பாகங்கள், லெனோவா, மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவை இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள், சம்பள பிரச்னை கோர சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்தது. இதில், தொழிற்சாலை கட்டடம் இடித்து சேதப்படுத்தப்பட்டது. வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. விலை உயர்ந்த இயந்திரங்கள், ஸ்மார்ட் போன்கள் சேதப்படுத்தப்பட்டன.

இது குறித்து போலீசில் புகார் அளித்தார் விஸ்ட்ரான் நிறுவனத்தின் செயல் தலைவர் பிரசாந்த். அந்த புகாரில், ’’தொழிற்சாலையை சேதப்படுத்தியதால் 437.40 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.412.5 கோடி மதிப்பிலான அலுவலக உபகரணங்கள், மொபைல் போன்கள், உற்பத்தி இயந்திரங்கள் சேதமாகியுள்ளன. ரூ.10 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு, ரூ.60 லட்சம் மதிப்புள்ள கார்கள் மற்றும் கோல்ஃப் வண்டிகள், ரூ.1.5 கோடி மதிப்புள்ள பிற கெஜெட்டுகள் சேதமடைந்துள்ளன. 5,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் சுமார் 2,000 மர்ம நபர்கள் இந்த வன்முறையில் காழ்ப்புணர்ச்சியை மேற்கொண்டனர்’’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வன்முறையால் ஏற்பட்ட சேதத்தின் அளவு ரூ.437 கோடியில் இருந்து ரூ.43 கோடியாக அந்நிறுவனம் குறைத்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அம்மாநில அமைச்சர் பசவராஜ் எஸ் பொம்மை, “இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 164 பேரை கைது செய்தனர். முன்னதாக 437 கோடி இழப்பு என்று கூறிய விஸ்ட்ரான் நிறுவனம் இப்போது இழப்பு 43 கோடி என்று எழுத்துப்பூர்வமாகக் கூறியுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே இச்சம்பவத்துக்கு கண்டனத்தை தெரிவித்த கர்நாடக அரசு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகா எப்போதும் அமைதியான மாநிலம். வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்பதில் முன்னணியில் உள்ளது. தொழில், வர்த்தகம் மற்றும் வணிக வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது. ஆலை மீண்டும் தொடங்கப்படுவதை உறுதிசெய்ய விஸ்ட்ரான் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தொழிலாளர்களின் உண்மையான குறைகளை நிவர்த்தி செய்கிறோம்” எனத் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com