குளிர்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணி அளவில் கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதில் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியது. இதில், எதிர்கட்சித் தலைவர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் மாநிலங்களவையை ஒத்திவைத்து குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையின் குளிர்க்கால கூட்டத்தொடரும் தொடங்கியது. மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா, மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும்படி வேண்டுகோள் விடுத்த நிலையில், அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின்னர், அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி மீதான அமெரிக்க குற்றச்சாட்டு தொடர்பாக குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டபட்டனர். இதனால், அவையை 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
நாளை அரசியலைமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெபி நட்டா, எல்.முருகன், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், திமுக சார்பில் டிஆர் பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,
“அரசியலமைப்பின் 75 ஆவது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்நேரத்தில் நாடாளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதாங்கள் நடக்கும் என நம்புகிறேன். அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் தேர்தலில் நிராகரித்துள்ளார்கள். நாடாளுமன்றத்தில் மக்களுக்காக காங்கிரஸ் எப்போதும் பேசியதில்லை. நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்க்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகிறார்கள்” என்று தெரிவித்தார்.