ராணுவ ரகசியங்கள் கசிந்துவிடாமல் இருக்க ஆவணங்களை அழிக்க போராடிய அபிநந்தன்

ராணுவ ரகசியங்கள் கசிந்துவிடாமல் இருக்க ஆவணங்களை அழிக்க போராடிய அபிநந்தன்
ராணுவ ரகசியங்கள் கசிந்துவிடாமல் இருக்க ஆவணங்களை அழிக்க போராடிய அபிநந்தன்
Published on

பாகிஸ்தானிடம் சிறைபட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் பிடிபடுபவதற்கு முன் இந்திய ஆவணங்களை அழிக்க முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. இதையடுத்து நேற்று காலை இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது.

இந்நிலையில் பிடிபடுவதற்கு முன் இந்திய ஆவணங்களை அபிநந்தன் அழிக்க முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாகிஸ்தானை சேர்ந்த முகமது ரசாக் சவுத்ரி என்பவர் இருந்துள்ளார். இவர் பாகிஸ்தானின் தினசரி நாளிதழான ‘டான்’னுக்கு அளித்துள்ள பேட்டியில், “ இரண்டு விமானங்கள் சுடப்பட்டன. அப்போது ஒரு விமானம் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் விழுந்தது. மற்றொரு விமானம் தீப்பிடித்து எரிந்து கீழே நோக்கி வந்தது. அப்போது அதில் இருந்த விமானி பாராசூட் மூலம் பத்திரமாக கீழே இறங்கினார். அவர் கையில் பிஸ்டலும் இருந்தது. அப்போது அங்கிருந்த சில இளைஞர்களிடம் இந்த இடம் இந்தியாவா..?  பாகிஸ்தானா..? என்று கேட்டார் அந்த விமானி. அதற்கு இளைஞர்கள் வேண்டுமென்றே இது இந்தியா என்றனர். இதனை உண்மையென நம்பிய அந்த விமானி, இந்தியாவை ஆதரித்து கோஷங்களை எழுப்பினார். அத்துடன் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், குடிக்க தண்ணீர் வேண்டுமென்றும் அந்த இளைஞர்களிடம் கேட்டார்.

ஆனால் இந்தியாவை ஆதரித்து அவர் எழுப்பிய கோஷம் சுற்றி நின்ற இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியது. உடனே அவர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று மறுகோஷம் எழுப்பினர். அத்துடன் கற்களை எடுத்து அவரை தாக்க முயற்சி செய்தனர். உடனே வானில் சுட்டவாறே அந்த விமானி ஓட ஆரம்பித்தார். அத்துடன் தான் வைத்திருக்கும் முக்கிய ஆவணங்களை காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டார். அதற்காக வேகமாக ஓடி அங்கிருந்த ஒரு குளத்தில் மூழ்கி தான் வைத்திருந்த முக்கிய ஆவணங்களையும், வரைபடங்களையும் பாகிஸ்தானிடம் சிக்காமல் இருக்க அழிக்க முயன்றார். நீருக்குள் மூழ்கி அந்த ஆவணங்களை மற்றவர்கள் எடுக்க முடியாத அளவிற்கு அழிக்கத் தொடங்கினார். அப்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவரின் காலில் அடிபட்டது. உடனே மற்றவர்கள் சுற்றி நின்று தாக்க ஆரம்பித்தனர். அப்போது தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கு வந்து மற்றவர்கள் தாக்குவதை தடுத்து நிறுத்தி அவரை பத்திரமாக மீட்டனர். அப்போது அவரின் பெயர், பதவி, மதம் உள்ளிட்ட விவரங்களை தவிர மற்ற எந்தவொரு தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். மிகவும் தைரியமாக காணப்பட்டார் அந்த விமானி” என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com