இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் டிடிவி தினகரனுக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலுக்கான ஆதாரங்களை டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலமாக லஞ்சம் கொடுக்க முயன்றதாக அ.தி.மு.க. அம்மா அணியின் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த 17-ந்தேதி கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவரின் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி குற்றப்பிவு போலீசார் அனுமதி கோரியிருந்தனர். போலீசாரின் கோரிக்கையை ஏற்று வரும் 28-ஆம் தேதி வரை சுகேஷ் சந்திரகேசரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 3 நாட்களாக டிடிவி தினகரனிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நான்காகவது நாளாக இன்றும் டிடிவி தினகரனிடம் விசாரணை நடைபெறுகிறது. இதனிடையே, டிடிவி தினகரனுக்கும் சுகேஷ்-க்கும் இடையேயான தொலைபேசி உரையாடலுக்கான ஆதாரங்கள் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது தினகரனுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார், தினகரனுக்கு எதிரான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது எனவும், கூடுதல் ஆதாரங்களை சேரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
ஆதாரங்களின் அடிப்படையில் டிடிவி தினகரன் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.