மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். 7 ஆவது முறையாக அவர் தாக்கல் செய்யும் நிதி நிலை அறிக்கை என்பது அவருக்கான சிறப்பாக இருந்தாலும், சாதாரண மக்களுக்கும், வருவாய்ப்பிரிவினருக்கும் பட்ஜெட்டில் என்ன இருக்கப்போகிறது என்று தெரியவில்லை.
அதேபோல விலைவாசி உயர்வுக்கு தீர்வுகளை தேடும் விதமாக இந்த பட்ஜெட் இருக்குமா என்ற கேள்வியும் இருக்கிறது. இந்திய பொருளாதாரம் வேகமாக வளர தேவையான தளம் அமைக்கப்பட்டுள்ளது என பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், “2047-ஆம் வருடத்துக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்கிற பிரதமர் மோடியின் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு மத்திய நிதிநிலை அறிக்கை அமையும்” என்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்கள்.
ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு தேவை என தெலுங்கு தேசம் கட்சியும், பீகார் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டுவர தங்களுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு தேவை என ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் வலியுறுத்தி வரும் நிலையில், கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையை புறந்தள்ள இயலாத கட்டாயத்தில் தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக திணறுகிறது.
பணவீக்கம் இந்த நிதி ஆண்டில் 4.5% குறைந்து அடுத்த நிதி ஆண்டில் மேலும் 4.1% குறையும் என ரிசர்வ் வங்கி தரவுகளில் குறிப்பிட்டு இருந்தாலும், பொருளாதார ஆய்வறிக்கை சில உணவப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதை ஒப்புக் கொண்டுள்ளது.
அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், பால் மற்றும் காய்கறிகள் ஆகிய அன்றாடம் பயன்படும் பொருட்களின் விலை உயர்வதை தடுக்காவிட்டால் பாஜக மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது போலவே சட்டசபை தேர்தல்களிலும் பின்னடைவை சந்திக்க வேண்டி வரும். இது பாஜக தலைவர்களுக்கு அழுத்தத்தை அளிப்பதால், சாதாரண மக்களின் நிதிச் சுமையை குறைக்க நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரிச் சலுகை மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்க மோடி அரசு முயற்சி செய்யும் என பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள். வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டிய கட்டாயம் நிர்மலா சீதாராமனுக்கு இன்னொரு சவாலாக உள்ளது.
இந்தியாவில் 56.5 கோடி மக்கள் பல்வேறு வேலைகள் மூலம் தங்களுடைய வாழ்வாதாரத்தை ஈட்டும் நிலையில், இதில் கிட்டத்தட்ட 45 சதவீதம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலமே வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். ஆகவேதான் விவசாயம் சாராத துறைகளில் ஒவ்வொரு வருடமும் 78.5 லட்சம் வேலை வாய்ப்புகளை 2030ஆம் வருடம் வரை தொடர்ச்சியாக உருவாக்க வேண்டும் என பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அளித்துள்ள 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான டிவிடெண்ட் மற்றும் எதிர்பார்த்ததை விட அதிக வரி வசூல் காரணமாக மத்திய அரசின் நிதிநிலை வலுவாக உள்ளது. ஆகவே கூடுதல் ஒதுக்கீடுகள் மூலம் தொழில்துறைக்கு ஊக்கம் அளித்து வேலை வாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக முதலீடு மற்றும் உற்பத்தி அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படலாம் எனவும் அத்தகைய சலுகைகளை வேலை வாய்ப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வல்லுநர்கள் கருதுகிறார்கள். விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித்தொகை மற்றும் ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் அளிப்பது போலவே, மருத்துவ வசதிக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
சுயதொழில் செய்ய விரும்புவர்களுக்கு பயிற்சி மற்றும் மானிய நிதி உதவி ஆகியவற்றை அளிக்கும் திட்டங்களையும் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் துறையைப் போலவே, மகளிர் மற்றும் இளைஞர்களுக்கும் பல்வேறு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை அதிகரித்து ஊக்கம் அளிக்க மோடி அரசு நடவடிக்கை எடுக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். சீன எல்லை மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பல்வேறு சவால்களை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு துறைக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.