பாராலிம்பிக்கில் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகள் 7 தங்கம் உட்பட 29 பதக்கங்களை வென்ற பெருமைக்குரிய நிகழ்வை இந்த நாடே கொண்டாடி வருகிறது. அதேபோன்று, சென்னையில் சொற்பொழிவாளர் ஒருவரின் பிற்போக்குத்தனமான கருத்துகளை அதேஇடத்தில் துணிச்சலாக தட்டிக்கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியரை பாராட்டி வருகிறோம்.
இந்த சூழலில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலை? அவர்கள் சந்திக்கும் அன்றாடச் சிக்கல்கள்,? தேவைகள் என்னென்ன என்பது பற்றி இன்றைய நாளில் பல்வேறு தொகுப்புகளை பார்க்க இருக்கிறோம்.
நல்ல உடற்திறனும், வெளிநாட்டு பயிற்சிகளும் கொண்ட வீரர், வீராங்கனைகள் கூட சாதிக்காததை பாராலிம்பிக் போட்டிகளில் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் சாதித்துள்ளனர். 7 தங்கம் உட்பட 29 பதக்கங்களை வென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் வெற்றி பெற்று பதக்கம் வென்றபிறகு கொண்டாடும் நாம், அவர்கள் இயலாமையுடன் போராடிக்கொண்டிருக்கும்போது என்ன செய்கிறோம் என்பதுதான் கேள்வி..
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றது. அதேநேரம் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 18 ஆவது இடம் பெற்றது. இது கடந்த ஒலிம்பிக் போட்டிகளை விட அதிக பதக்கங்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். ஆனால் ஒரு வெள்ளி உள்ளிட்ட 6 பதக்கங்களை கொண்டாடிய அளவுக்கு இந்த 7 தங்கம் உள்ளிட்ட 29 பதக்கங்களை வென்றெடுத்த வீரர், வீராங்கனைகளை கொண்டாடினோமா என்றால் கேள்விக்குறியே..
மாற்றுத்திறன் கொண்ட வீரர், வீராங்கனைகளுக்கான அடிப்படை வசதிகள், தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை என்ற குறை மாற்றுத்திறனாளிகளிடையே இருக்கிறது. கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபால் வீரர் மோகன் குமார், குழு விளையாட்டுப் போட்டிகளை முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகிறார்.
அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கான மைதானம் வேண்டும் என்கிறார். 2016 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான மனோஜ், குண்டு எறிதல் பிரிவில் பல பதக்கங்களை வென்றவர். 16 நாடுகளுக்குச்சென்று விளையாடி பதக்கங்களை குவித்தவர். கடந்த காலங்களை விட தற்போது மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்காக சிறப்பு வசதிகளுடன் மைதானங்கள் இருப்பதாக கூறுகிறார்.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு செல்லும் செலவுகளை அரசு ஏற்றுக்கொள்வதாகவும், மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டு அதன் மூலம் நிர்வகிக்கப்படுவதாகவும் கூறுகிறார் மனோஜ். மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு வேறு பல கோரிக்கைகளும் இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி வழங்க சிறப்புப் பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பெண்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த ஜெயபிரபா.
விளையாட்டுத்துறையில் மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பெற குறைவான மைதானங்களே உள்ள நிலையில் அவற்றை அனைத்து பகுதிகளுக்கும் விரிவு படுத்தவேண்டும்,
பாராலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை குவிப்பவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற குரல்களும் வலுவாக எழுகின்றன.