ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்ற முடிவின் முழு விவரம்

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்ற முடிவின் முழு விவரம்
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்ற முடிவின் முழு விவரம்
Published on

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தையும் முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

`இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் இருக்கும் ராமர் பாலம் இயற்கையாக உருவானது அல்ல. மனிதர்களால் கட்டப்பட்டது. இதன் கற்கள் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. அதனை மூடியிருக்கும் மணல் படிமங்கள், 4 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என அறிவியல் பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அதனால் சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும், அதனை தேசிய பிரதான சின்னமாக அறிவிக்க வேண்டும்’ எனக்கோரி கடந்த 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியசுவாமி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, `சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலம் அகற்றப்படாது’ என உறுதியளித்து, கடந்த ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் , மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு கவனமாக பரிசீலனை செய்து வருகிறது. வேண்டுமானால் மனுதாரர் கூடுதல் ஆவணங்களை கோரிக்கையாக உரிய அமைப்பு முன்பு கொடுக்கலாம்” என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட சுப்ரமணியசுவாமி, “இந்த விவகாரத்தை வேண்டுமென்றே மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு அமைச்சரையோ அல்லது அதிகாரிகளையோ நான் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளது. அதனால் இதுதொடர்பான பிரச்சனையை முன்னதாக உச்சநீதிமன்றம் வழங்கிய ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு முடிக்க வேண்டும். அதில் ஏதேனும் குழுப்பம் ஏற்படும் பட்சத்தில் நான் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவேன்” என தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவில், “இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வாதங்களை நீதிமன்றம் பதிவு செய்கிறது. அதனால் ராமர் பாலத்தை தேசிய பிரதான சின்னமாக அறிவிக்கக்கோரி சுப்ரமணிசுவாமி தொடர்ந்த மனு உட்பட அனைத்து இடைக்கால மனுக்களையும் தற்போதைக்கு முடித்து வைக்கப்படுகிறது. மேலும் மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு சென்று கோரிக்கை கடிதத்தை வழங்கலாம். இருப்பினும் எதிர்காலத்தில் மனுதாரர்களுக்கு ஏதேனும் நிவாரணம் தேவைப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம்” என தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்த விவகாரத்தில் என்னென்ன செயல்முறை மற்றும் நடவடிக்கைகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பான நிலை அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com