மத்திய அரசுடன் நாளை மறுநாள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் ஹரியானாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகள் மற்றும் பெரிய வணிகநிறுவனங்களை மூடப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐந்து கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத சூழலில் அண்மையில் நடந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, நான்கு பிரச்னைகளில் இரு பிரச்னைகளில் கருத்தொற்றுமை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில், தங்களது கோரிக்கையை ஏற்க மறுத்தால், ஹரியானாவில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை மூடப் போவதாக விவசாயிகள் எச்சரித்தனர். மேலும் குண்ட்லி மனேசர் இடையே டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் கூறினர்.
இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் விவசாயிகள் தரப்பில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளில் வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் வேளாண் சங்க பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹீன்பாக்கில் நடந்த போராட்டத்தை போன்று தங்களது போராட்டத்தையும் மத்திய அரசு கருத வேண்டாம் என்றும், தங்களது போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது என்றும் வேளாண் சங்க பிரதிநிதிகள் கூறினர்.