வறுமையை ஒழிக்க உதவுமா ராகுலின் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம்?

வறுமையை ஒழிக்க உதவுமா ராகுலின் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம்?
வறுமையை ஒழிக்க உதவுமா ராகுலின் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம்?
Published on


பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம் வறுமையை ஒழிக்க பயன்படவில்லை என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 

குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம் என்பது மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. சத்தீஸ்கரில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க மக்கள் வாக்களித்தால் அனைத்து ஏழை மக்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். இது என்ன திட்டம்? இதனால் யார் பயன்பெறுவர்? என்பன போன்ற எவ்விதமான தகவலையும் ராகுல் காந்தி தரவில்லை. ஆனால் ஏழைகளின் வறுமையை போக்க, பசியிலிருந்து மக்களை மீட்க இந்தத் திட்டம் பயனளிக்கும் என்று மட்டும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம் என்றால் என்ன? அவற்றை எந்தெந்த நாடுகள் ஏற்கனவே அமல்படுத்தியுள்ளன என்பது நம்முன் இருக்கும் கேள்வி.

சர்வதேச நிதியம் (International Monetary Fund) குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம் என்பதற்கு ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, A cash transfer of an equal amount to all individuals in a country எனக் குறிப்பிட்டுள்ளது. அதாவது நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு சீரான ஊதியத்தை பகிர்ந்தளிப்பது இதன் நோக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது.  

மேலும் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம் என்பது அரசாங்கத்தின் மற்ற சலுகைகளிலிருந்து மாறுபட்டதாகும். அதாவது அரசு ஏற்கனவே தரும் வரிச் சலுகைகள், நலத்திட்ட உதவிகள், மானியங்கள் ஆகியவற்றிலிருந்து இந்தக் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம் மாறுபடும். ஏனென்றால், இந்த நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் ஆகிய அனைத்தும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கே சேரும். ஆனால் இந்த Universal Basic Income என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு சீரான ஊதியத்தை ஏற்படுத்தி தருவதாகும். 

இந்தக் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டத்தை உலகநாடுகள் பல சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றின் விவரங்களை தற்போது பார்ப்போம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பின்லாந்து இதனை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியது. இந்த நாட்டில் 25 வயது முதல் 58 வயது வரை உள்ள வேலையில்லாத மக்களுக்கு மாதம் 670 டாலர் (560 யூரோ) ஊதியமாக கொடுத்து வருகிறது.

அடுத்தாக கனடாவிலுள்ள இரு மாகாணங்கள் இந்தத் திட்டத்தை அமல்படுத்தின. க்யூபிக் மாகணத்திலுள்ள பணி செய்ய இயலாதோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதம் 73 டாலர் (54 யூரோ) ஊதியமாக கொடுக்க முன்வந்தது. அதோபோல, அண்டாரியோ மாகாணத்தில் வேலையில்லாதவர்கள் மற்றும் ஆண்டுக்கு 26000 டாலர் கீழாக சம்பாதிக்கும் மக்களுக்கு வருடம் 17000 கனடா டாலர் ஊதியமாக வழங்கப்பட்டது.

மேலும், கென்யா நாட்டில் 'Give Directly' என்ற தொண்டு நிறுவனம் இந்த யுனிவர்சல் பேசிக் இன்கம் திட்டத்தை 200 கிராமங்களில் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் 44 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நாளுக்கு 0.75 அமெரிக்க டாலர் ஊதியமாக வழங்கப்படுகிறது. அதேபோல, 71 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ஒரு தவனையாக 500 டாலர் வழங்கப்படுகிறது.

நெதர்லாந்து நாட்டில் இந்தத் திட்டம் மக்களின் வயதிற்கேற்ப அமல்படுத்தப்பட்டது. அதாவது 18 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்களுக்கு மாதம் 700 யூரோ வழங்கப்பட்டது. அதேபோல, 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 165 யூரோ வழங்கப்பட்டது. 

அமெரிக்கா அலாஸ்காவில் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் ‘அலாஸ்கா நிரந்தர நிதி’ என்ற பெயரில் நாம் மேற்கூறிய இதே திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த அலாஸ்கா நகரத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் மாதத்திற்கு 1,100 டாலர் எண்ணெய் இருப்புகளிலிருந்து கிடைக்கும் நிதி மூலம் வழங்கப்படுகிறது. மேலும் கலிஃபோர்னியாவிலுள்ள ஸ்டாக்டனில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதம் 500 டாலர் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.  

இத்தாலி நாட்டில் உள்ள லிவோர்னோ நகரில் இதே திட்டம் அமல்படுத்தப்பட்டது. அங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கு மட்டும் மாதம் 500 டாலர் ஊதியமாக வழங்கப்பட்டது.

இத்தனை நாடுகள் இந்தத் திட்டத்தை சோதனை முயற்சியாக அமல்படுத்தினாலும் இதன் செயல்பாடுகள் பற்றி பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால், 2017ஆம் ஆண்டு Organisation for Economic Co-operation and Developmentன் அறிக்கை இந்த யுனிவர்சல் பேசிக் இன்கம் திட்டம் வறுமையை ஒழிக்க உதவவில்லை என்கிறது. மாறாக இத்திட்டம் வறுமையின் அளவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com