வயநாடு to ரேபரேலி: தொகுதி மாறுகிறாரா ராகுல் காந்தி?

2019 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இந்த வருட மக்களவைத் தேர்தலில் மீண்டும் தொகுதி மாறுவார் என காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ராகுல் காந்தி
ராகுல் காந்திட்விட்டர்
Published on

கணபதி சுப்ரமணியம் - புது தில்லி நிருபர்

2019 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இந்த வருட மக்களவைத் தேர்தலில் மீண்டும் தொகுதி மாறுவார் என காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. வயநாடு தொகுதியில் இடதுசாரி கூட்டணி சார்பாக ஆனி ராஜா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறது. ஆனி ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தவிர முஸ்லிம் லீக் கட்சி தங்களுக்கு வயநாடு தொகுதி வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாக கேரளா அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில்தான் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டுமா என்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஆலோசனையில் உள்ளது.

சோனியா, ராகுல் காந்தி
சோனியா, ராகுல் காந்தி file image

சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளதால், அந்தத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என பல காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் 2019 ஆம் வருட மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ராகுல் காந்தியும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். உத்திர பிரதேசம் மக்களவைக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பும் மாநிலம் என்பதால் கட்டாயம் அங்கிருந்து ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என பல காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் 80 மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி
ராகுல் காந்திfile image

2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். ஸ்மிருதி இராணி அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த நிலையில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த ஐந்து வருடங்களில் வயநாடு தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் ராகுல் காந்தி, அமேதி தொகுதியை புறக்கணித்து வருவதாகவும், ஆகவே அவர் அங்கு போட்டியிட்டால் மீண்டும் தோல்வியை சந்திப்பார் எனவும் பாஜக தலைவர்கள் நையாண்டி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியுடன் சமீபத்தில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகளை முடித்து கூட்டணியை உறுதி செய்துள்ளது. மேலும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை உத்தர பிரதேச மாநிலத்தில் அமேதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று உள்ளது. யாத்திரையில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என விரும்புகிறார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்திFile image

ஆகவே ராய் பரேலி அல்லது அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர்களும் விரும்புகின்றனர். பிரியங்கா காந்தி ராய் பரேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், அவர் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்து வருகிறார்.

தேவைப்பட்டால் ராகுல் காந்தி தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் தெலுங்கானா மாநிலத்தில் இரண்டாவதாக ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிடலாம் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர். 2019 ஆம் வருட மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி தென்னிந்தியாவில் போட்டியிட வேண்டும் என ஆலோசனை நடைபெற்ற போது கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடலாம் எனவும் பல காங்கிரஸ் தலைவர்கள் பரிந்துரை அளித்தனர். இறுதியாக கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட முடிவு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியினர் கேரள மாநிலத்தில் உற்சாகமாக களம் இறங்கியதால் அந்தக் கட்சி எதிர்பார்த்ததை விட அதிகமாக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com