NDA கூட்டணியில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் தொடர்வார்களா? மத்தியில் புதிய ஆட்சி அமையுமா?

NDA கூட்டணியில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் தொடர்வார்களா? இல்லை, இவர்களின் ஆதரவு இழக்கப்படும் நிலையில் மத்தியில் புதிய ஆட்சி அமைய வாய்ப்புள்ளதா?
NDA கூட்டணி
NDA கூட்டணிமுகநூல்
Published on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மத்தியில் மூன்றாவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் நிலவிவருகிறது.

இதை உறுதிசெய்யும் வகையில் டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டமானது நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பாஜக கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசத்தை சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரு கட்சிகளை மட்டும் குறிப்பிட்டு சொல்லக் காரணம், மத்தியில் பாஜக ஆட்சியை அமைக்க வேண்டுமானால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஏன் முக்கியம்?

கடந்த 2014, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை வாக்குகளை பெற்றதால் கூட்டணி கட்சிகளில் உதவி தேவையில்லாமல் இருந்தது. ஆனால், தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனியாக 240 இடங்களை மட்டுமே பாஜக பெற்றுள்ளது. இதன் முலம் தனது தனிப் பெரும்பான்மைய இழந்துள்ள பாஜக, கூட்டணி கட்சிகளின் உதவியோடுதான் 290 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனது வெற்றியை நிலைநாட்டியுள்ளது.

புதிய ஆட்சி வருமா?

இந்தவகையில், பாஜக கூட்டணியை பொறுத்தவரை, தெலுங்கு தேசம் - 16, ஐக்கிய ஜனதா தளம் - 12 கைப்பற்றியுள்ளது குறிப்பட்டத்தக்கது. இது இரண்டையும் சேர்த்தால் கிடைக்கும் 28 தொகுதிகள் என்பது, பாஜக ஆட்சி அமைக்க கட்டாயம் தேவைப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்

ஒருவேளை இவர்கள் இருவரும், 234 தொகுதிகளில் வெற்றி பெற்ற I.N.D.I.A. கூட்டணிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தால், 290 தொகுதிக்கும் மேல் வெற்றியை பதிவு செய்திருக்கும் பாஜக கூட்டணி, 28 தொகுதிகளை இழக்க நேரிடும். அதாவது ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் அதற்கு கிடைக்காமல் போகும்

NDA கூட்டணி
தனிப்பெரும்பான்மை பெறாத பாஜக... மத்தியில் ஆட்சி அமைப்பதை காங்கிரஸால் தடுக்க முடியுமா?

இதனால், மத்தியில் புதிய ஆட்சி வருவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுவிடும். இதன் காரணமாகவே, இந்த இரு கட்சிகளுடன் பாஜக மேற்கொள்ளும் ‘ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பான கலந்தாய்வு’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

NDA கூட்டணி
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக!

சந்திரபாபு நாயுடுவை உறுதிசெய்த பாஜக!

இந்த சூழலில்தான் தொலைப்பேசியில் இவர்களை தொடர்பு கொண்டனர் பாஜகவினர். தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொள்ளவும் தற்போது மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திராவில் முதலமைச்சராக பதிவியேற்க இருக்கும், சந்திரபாபு நாயுடு பாஜக உடனான கூட்டணியில் தாங்கள் உறுதியாக இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், “நாட்டில் பல்வேறு அரசியல் திருப்பங்களை பார்த்துள்ளேன். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடந்து வருகிறது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுtwitter page

இன்று, டெல்லியில் நடைபெறும் பாஜக கூட்டணி கூட்டத்தில் நான் பங்கேற்கவுள்ளேன். மேலும், பாஜக, ஜனசேனா கட்சிகள் இணைந்து பணியாற்றியதால்தான் பெரும் வெற்றி எனக்கு சாத்தியமானது. ஆகவே, பாஜக தலைமையிலான ஜனநாயக கூட்டணியில்தான் நாங்கள் அங்கம் வகிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பாஜக உடனான தனது கூட்டணியை மீண்டும் உறுதி செய்துள்ளார். மேலும் இன்று மாலை நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்துகொள்ள உள்ளதையும் உறுதிசெய்துள்ளார். இதே போல் நிதிஷ் குமாரும் அக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பயம்காட்டும் நிதிஷ் குமார்?

இருப்பினும் நிதிஷ் குமார் இன்று I.N.D.I.A. கூட்டணியில் உள்ள தேஜஸ்வி யாதவ்வுடன் விமானப் பயணம் மேற்கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அவர் I.N.D.I.A. கூட்டணியோடு சேர்வோரோ என்ற அச்சத்தை பாஜக-வுக்கு கொடுத்துள்ளது.

கூடுகிறது I.N.D.I.A. கூட்டணி

இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் மாலை 6 மணிக்கு I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டமும் நடைப்பெறவுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்துகொள்ள இருக்கிறார்.

ஒருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆலோசனை, மற்றொருபுறம் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை நடைபெறவுள்ள சூழலில், தேசிய அரசியல் களத்தில் சற்று பரப்பரப்பான சூழல் நிலவுவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com