தெலங்கானாவில் ஆட்சியமைத்தால் அங்குள்ள அனைவரும் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என பாரதிய ஜனதா கட்சி உறுதியளித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானாவில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். ஐதராபாதில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மத்திய அமைச்சரும், தெலங்கானா மாநில பாஜக தலைவருமான கிஷன் ரெட்டி, பாஜக மூத்த தலைவரான பிரகாஷ்
ஜாவடேக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில், “பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி அரசு செய்துள்ள ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைக்கப்படும் . அதோடு, தேர்தலில் வெற்றிபெற்றால், பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்.
மேலும், மதம் சார்ந்த இடஒதுக்கீட்டு நடைமுறைகளை ரத்து செய்து, ஓ.பி.சி, எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும்.
அதோடு, வருடத்திற்கு 4 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது, நெல்லுக்கு 3 ஆயிரத்து 100 ரூபாயாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வது, இலவச பயிர்க்காப்பீடு ” உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
119 இடங்களை உள்ளடக்கிய தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு, வரும் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.