நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்களில் புதிய விதிமுறைகள் மூலமாக, உள்ளடக்கம் குறித்து உறுதியான சோதனை செய்யப்படும் என்ற அறிக்கையை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சாஷாங்க் சேகர் ஜா தாக்கல் செய்த இது தொடர்பான பொதுநல மனுவில், அரசு இத்தகைய பதிலை அளித்தது. ஓடிடி தளங்களில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தை சரிபார்க்க ஒரு முறையை வைக்க வேண்டிய அவசியம் குறித்து அரசுக்கு பல புகார்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், எம்.பி.க்கள், முதல்வர்கள் ஆகியோரிடமிருந்து வந்துள்ளன என்றும், அதனால்தான் சமூக ஊடக தளங்கள், ஓடிடி மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கான வரைவு தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் - 2021, சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது இணையத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் தகவல், ஆடியோ-காட்சி உள்ளடக்கம் போன்றவை சட்டத்தின் பிரிவு 67, 67 ஏ மற்றும் 67 பி ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது, மேலும் ஆபாசமான, பாலியல் ரீதியான செயலைக் கொண்ட உள்ளடக்கத்தை வெளியிடுவதையோ அல்லது கடத்துவதையோ இது தடைசெய்கிறது.
சமீபத்தில் மார்ச் 5 ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியத் தலைவர் அபர்ணா புரோஹித் மீது தாண்டவ் வெப் சீரிஸ் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. புதிய விதிகளின்படி, ஓடிடி இயங்குதளங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடக இணையதளங்களுக்கான குறை தீர்க்கும் முறையையையும் அரசாங்கம் உருவாக்கியுள்ளது.