ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை நாளை பார்வையிட உள்ளனர்.
ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்கள் குழு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்து உரையாடினார். அப்போது அவர் ஜம்மு-காஷ்மீர் தொடர்பாகவும், பயங்கரவாதம் தொடர்பாகவும் விவாதித்தார். அத்துடன் ஐரோப்பிய எம்பிக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு செல்லும் போது அம்மாநிலத்தின் கலாச்சாரத்தை பற்றி நன்கு அவர்கள் அறிய வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்கள் நாளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை நேரில் சென்று பார்வையிட உள்ளனர். இது தொடர்பாக பில் நியூட்டன் டன் என்ற எம்பி, “பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய அரசு செய்திருந்த நடவடிக்கை குறித்து தெரிவித்தார். எனினும் அங்கு தற்போது எந்தவகையான சூழல் நிலவுகிறது என்பதை நாங்கள் நேரில் போய் பார்க்க விரும்புகிறோம். அத்துடன் அங்கு வசிக்கும் மக்களிடம் கலந்து உரையாட ஆவலாக உள்ளோம். எங்களை பொருத்தவரை அங்கு அமைதியான சூழல் நிலவ வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி விலக்கி கொண்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைப்பு செய்தது. இந்த நடவடிக்கைக்கு பிறகு அங்கு சில கட்டுபாட்டுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சந்திக்க செல்லும் முதல் வெளிநாட்டு குழு இந்த ஐரோப்பிய எம்பிக்கள் குழு என்பது குறிப்பிடத்தக்கது.