பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவை விட, குறைவான இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிப்பாரா? அல்லது அரசியல் குறுக்கீடுகளால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கொரோனா நோய்ப் பரவல் சற்று தணிந்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக தேர்தலை சந்தித்திருக்கிறது பீகார். ஆளும் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா இந்தத் தேர்தலில் மாநிலக் கட்சியை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும் இதுவே முதல் முறை. அதே போல தந்தை லாலு இல்லாமல் தேர்தலை சந்தித்து, ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்த, இளம் தலைவர் என்ற பெருமையையும் முதல்முறையாக பெற்றிருக்கிறார் தேஜஸ்வி.
தேர்தலுக்கு முன்பாக ஒப்புக்கொண்டபடி நிதிஷ்குமாரையே முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கிறது பாரதிய ஜனதா. பாதுகாப்புத் துறை அமைச்சரும், பாரதிய ஜனதா மூத்தத் தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில் பாட்னாவில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார்.
அதன்படி பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. கடந்த முறை ஐக்கிய ஜனதா தளத்துக்கு அதிக அமைச்சர்கள் இருந்த நிலையில், இந்த முறை குறைவான இடங்களில் வெற்றியை பெற்றிருப்பதால், அந்த வாய்ப்பு பாரதிய ஜனதாவுக்கே கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. முக்கிய இலாகாக்கள் மட்டுமின்றி இரு துணை முதல்வர் பதவிகளையும் பாரதிய ஜனதா கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் குறைவான எம்எல்ஏக்களை வைத்திருக்கும் நிதிஷ்குமார், எப்படி ஐந்து ஆண்டுகள் வரை முதல்வர் பதவியில் நீடிப்பார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பீகார் அரசியலை பொறுத்தவரை நிதிஷ்குமார் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைய வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் குரலாக இருக்கிறது. மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியை நிதிஷ்குமாருக்கு எதிராக களமிறக்கி, அவரது செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கையில் பாரதிய ஜனதா ஈடுபட்டதாகவும், எனவே, அவர் கூட்டணியில் இருந்து விலகுவது தான் எதிர்கால அரசியலுக்கு நல்லது என்றும் அதற்கான காரணத்தை முன் வைத்திருக்கிறது காங்கிரஸ்.
வெளிப்படையாகவே பாரதிய ஜனதா மீது இந்த குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதால், பிற மாநிலங்களில் ஆட்சியை காப்பாற்றிக் கொண்டது போல, திரைமறைவில் இருந்து நிதிஷ்குமாரின் கட்சியை உடைக்கும் பணிகளில் பாரதிய ஜனதா ஈடுபடலாம் என்ற ஊகங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
மேலும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணியில் ஏற்கெனவே முதல்வராக பதவி வகித்திருப்பதால், பாரதிய ஜனதாவின் திரைமறைவு முயற்சிகளை முறியடிக்க மீண்டும் அப்படியொரு முடிவை அவர் எடுக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
பதவியேற்பதற்கு முன்பாகவே ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை பாரதிய ஜனதா கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், அடுத்த ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் எப்படி நிம்மதியாக தொடருவார் என்ற சந்தேகம் நிலவுகிறது. அவர் நீடிப்பாரா? அல்லது அதிரடி முடிவுகளை எடுப்பாரா? என்பது அடுத்து வரும் நாட்களில் தான் தெரியவரும்.