“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது என்றால், அதில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்னமும் அனல் கூட்டி இருக்கிறது. அதிலும் குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை போலவே, பஜ்ரங் தள் அமைப்பையும் ஆட்சிக்கு வந்தவுடன் தடை செய்வோம் என கொடுத்திருந்த வாக்குறுதி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மதம் சார்ந்த மோதல்கள் அதிகரித்து வருகிறது. திப்பு சுல்தான் விவகாரம் தொடங்கி, ஹிஜாப் அணிவது என தொடர்ச்சியாக இஸ்லாமியர்களின் எதிர்ப்பு மனநிலையை ஒரு தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். கர்நாடக மாநில மக்கள் தொகையில் சுமார் 13 முதல் 15 சதவிகிதத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆவார்கள். மொத்தம் 60 தொகுதிகளுக்கும் மேல், வெற்றிக்கு இஸ்லாமியர்களின் வாக்கு மிகவும் அவசியம் என்பதுதான் கள நிலவரம்.
எனவே, இவர்களுக்கு இருக்கும் பாஜக எதிர்ப்பு மனநிலையை அப்படியே மொத்தமாக அறுவடை செய்ய நினைக்கிறது காங்கிரஸ். காரணம் மாநில கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்டவை இந்த வாக்குகளை கணிசமாக பிரிக்கும். இதற்கு கூடுதல் ஈர்ப்பு ஒன்று காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்பட்டது.
அதுதான் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை, ஆளும் பா.ஜ.க. அரசு ரத்து செய்த நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அந்த இட ஒதுக்கீடு இஸ்லாமியர்களுக்கே வழங்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்பு. எனினும் கொஞ்சம், கொஞ்சம் சிதறும் வாக்குகளின் விகிதாச்சாரத்தையும் தங்களுக்கே உரியதாக்கி விட வேண்டும் என்பதற்காக எடுத்த முக்கியமான ஆயுதம்தான், பஜ்ரங் தள் அமைப்பு தடை என்ற விஷயம்.
ஏற்கனவே குறிப்பிட்ட இஸ்லாமியர்கள் தொடர்பான விவகாரங்களில் மிகத் தீவிரமாக செயல்பட்டது இந்த அமைப்புதான். எனவே, இந்த அமைப்பிற்கு தடை விதிக்கும் பட்சத்தில் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு பொது அமைதி விவகாரத்தில் கவனம் செலுத்தினோம் என்றும் சொல்ல முடியும். அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு இணக்கமாக நடந்து கொண்டோம் என்றும் சொல்ல முடியும்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் இந்த குறிப்பிட்ட வாக்குறுதியை கையில் கொண்டு ஹிந்துக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்ற பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக இந்து கடவுளான ஹனுமனை காங்கிரஸ் அவமதிக்கிறது என்ற பிரச்சாரம் மக்களிடம் தீவிரமாக சென்று சேருகிறது என்ற கருத்துக்கள் பரவி வருகிறது.
இது தேர்தல் முடிவுகளில் கூட பாதிப்பை ஏற்படுத்த முடியும் என ஆருடங்கள் சொல்லப்படுவதால், சுதாரித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி, அதனை சரி செய்வதற்காக தீவிரமாக இறங்கி இருக்கிறது. பி.எஃப்.ஐ., பஜ்ரங் தள் உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகள் அனைத்தையும்தான் தாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம் தவிர, இந்த குறிப்பிட்ட அமைப்பை மட்டும் தடை செய்வோம் என்று கூறவில்லை; மேலும் இத்தகைய அமைப்புகளை தடை செய்வது என்பது மாநில அரசின் அதிகாரமும் இல்லை என அம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி திடீரென மாற்றி பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் ஆன டி.கே.சிவக்குமார் மைசூரில் உள்ள சாமுண்டி கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்குள்ள ஆஞ்சநேயர் சிலை முன்பாக அவர் விழுந்து வணங்குவது போன்ற புகைப்படங்களை காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர். கர்நாடகாவில் உள்ள முக்கியமான ஆஞ்சநேயர் கோவில்களை தரம் உயர்த்துவது குறித்த பல திட்டங்கள் தங்களிடம் இருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் அவை அனைத்தையும் செயல்படுத்துவோம் என சிவகுமார் பேட்டி அளித்து, சேதாரத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.
ராகுல் காந்தி உள்ளிட்ட பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்கள் அனைவரையும் வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தையும் காங்கிரஸ் கட்சி வகுத்து வருகிறது. ஹனுமன் துதி பாடும் நிகழ்ச்சிகளை மாநில முழுவதும் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு இருக்கக்கூடிய சூழலில், அவர்களுக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியினரும், இதேபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் ஆயத்தமாகி வருகின்றனர்.
எனவே கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் மத அரசியல் பெரியதாக வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.