“விமான ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால்தான் என் கணவரை காப்பாற்ற முடியல; அதனால்..”- பெண் வைத்த கோரிக்கை

சமீபத்தில் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, தன் கணவனை இழந்ததாக பெண்ணொருவர் கூறியுள்ளார். இதையடுத்து தன் குடும்பத்தை காப்பாற்ற, விமான நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு கோரிக்கையும் விடுத்துள்ளார் அவர்.
அம்ரிதா - நம்பி ராஜேஷ்
அம்ரிதா - நம்பி ராஜேஷ்ட்விட்டர்
Published on

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நம்பி ராஜேஷ். இவருக்கு திருமணமாகி அம்ரிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நம்பி ராஜேஷுக்கு மஸ்கட்டில் இருக்கும் ஒரு இந்திய பள்ளியில் ஐடி மேலாளராக வேலை கிடைத்துள்ளது. மனைவியையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு நம்பி ராஜேஷ் மஸ்கட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.

ஏர் இந்தியா
ஏர் இந்தியாட்விட்டர்

இந்நிலையில், கடந்த 7ம் தேதி அதிகாலையில், “நம்பி ராஜேஷுக்கு திடீரென உடல் நிலை சரியில்லை. உடனடியாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். நீங்கள் உடனடியாக புறப்பட்டு மஸ்கெட் வாருங்கள்” என்று மருத்துவமனை ஒன்றிலிருந்து அம்ரிதாவுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவரும் அவரது தாயாரும், உடனடியாக மஸ்கெட் செல்ல தீர்மானித்துள்ளனர். அதன்படி தகவல் கிடைத்த அன்றே (7ம் தேதி) காலை 8.30 மணிக்கு ஏர் இந்தியா எண் IX 549 என்ற விமானத்தில் டிக்கெட் எடுத்து மஸ்கெட் செல்வதற்காக இருவரும் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்திருக்கின்றனர்.

அம்ரிதா - நம்பி ராஜேஷ்
மும்பை: விமானத்தில் அடிபட்டு 36 ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழப்பு? - வனத்துறை அதிகாரிகள் சந்தேகம்

ஆனால் திடீரென்று விமான ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், மஸ்கட் செல்லவிருந்த விமானம் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அம்ரிதா, தனது நிலையையும், தனது கணவரின் நிலையையும் ஏர் இந்தியா அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி, மாற்று விமானத்தில் பயணம் செய்ய உதவுமாறு கோரியுள்ளார்.

ஆனால் ஏர் இந்தியா அதிகாரிகள் அம்ரிதாவின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மேலும் அவர்களின் டிக்கெட் தொகையையும் திருப்பி தரவில்லை. இதனால் மாற்று விமானத்தில் மஸ்கெட் செல்ல இருவராலும் முடியவில்லை.

மனைவி உதவிக்கு வரமுடியாத நிலையில், மஸ்கெட்டில் இருந்த கணவர் ராஜேஷ் தானாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் பெற்றுக்கொண்டு அவரது அறைக்கு சென்றுள்ளார். இருப்பினும் உதவிக்கு ஆள் இல்லாமல் கடந்த 13ம் தேதி அவர் இறந்துள்ளார்.

இந்நிலையில் ஏர் இந்தியா அம்ரிதாவின் டிக்கெட் தொகையை 15ம் தேதி திருப்பிக்கொடுத்துள்ளது. இதை அடுத்து, 17ம் தேதி அம்ரிதாவும், அவரது தாயாரும் மஸ்கெட் சென்றுள்ளனர். ஆனால் அங்கு ராஜேஷ் அவரது அறையில் உயிரற்று கிடந்ததைதான் அவர்களால் பார்க்கமுடிந்தது.

ஏர் இந்திய விமானம்
ஏர் இந்திய விமானம்PT

இதையடுத்து, “எனது கணவரின் இறப்பிற்கு ஏர் இந்தியா ஊழியர்கள்தான் காரணம். நாங்கள் திட்டமிட்டப்படி 7ம் தேதி மஸ்கெட் சென்றிருந்தால், என் கணவரை காப்பாற்றி இருப்பேன். எனது கவனிப்பாலும், உளவியல் ஆதரவாலும் எனது கணவரை உயிருடன் மீட்டு இருப்பேன். ஆனால் பொறுப்பற்ற ஏர் இந்தியா ஊழியர்களின் செயலால் என்னால் என் கணவரை காப்பாற்ற முடியாமல் போனது. எனக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். எனக்கு அதிக நிதிசுமை உள்ளது குடும்பத்தின் ஒரே வருமானத்தை கொடுத்தவர் என் கணவர் மட்டும்தான். அவரை ஊழியர்களின் அலட்சியத்தால் நான் இழந்துள்ளேன். ஆகவே எனக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்” என்று கோரிக்கை எழுப்பி, அம்மாநில முதல்வரிடம் மனுவும் கொடுத்து இருக்கிறார்.

இவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஏர் இந்தியா, அம்ரித்தாவிடம் அவரின் கோரிக்கையை மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com