ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்து விட்டு விபத்து என்று நாடகமாடிய மனைவியை 60 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
புதுவை காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனியார் வேன் ஓட்டுநராக இருந்தார். இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த மார்ச் 14 ம் தேதி கந்தசாமி தனது இருசக்கர வாகனத்தில் தொண்டமாநத்தம் பத்துகண்ணு மெயின்ரோட்டில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று கந்தசாமியின் வாகனத்தின் மீது மோதியது.
இதில் கந்தசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார். இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கந்தசாமி மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் விபத்தை எற்படுத்திய காரின் ஓட்டுநர் பிரவீண்குமாரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பர் தூண்டுதலின் பேரில் கந்தசாமியை கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். இதைத்தொடர்ந்து ஸ்ரீதரை அழைத்து வந்து விசாரித்தபோது “எனக்கும் எனது வீட்டுக்கு அருகே வசித்து வந்த கந்தசாமியின் மனைவி புவனேஷ்வரிக்கும் திருமணத்திற்கு மீறிய தொடர்பு இருந்தது. இதனால் கந்தசாமிக்கும் எனக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த புவனேஸ்வரியும் நானும் ஓட்டுநர் பிரவீண் குமாரின் உதவியோடு கந்தசாமியை காரை ஏற்றி கொலை செய்தோம்” என ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.