ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் சகோதரர் அக்பருதீன் ஓவைசியின் பேச்சினால் கோபமுற்றதாக, அவரின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சச்சின் சர்மா என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்
இது தொடர்பாக வெளியாகியுள்ள சச்சின் சர்மாவின் வாக்குமூல வீடியோவில், "2014 ஆம் ஆண்டில், தாஜ்மஹால் மற்றும் குதுப்மினார் எங்கள் முன்னோர்களுக்கு சொந்தமானது, முஸ்லிம்கள் 800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டனர் என்று அக்பருதீன் ஒவைசி கூறியிருந்தார். எனவே அந்த அறிக்கையால் நான் காயப்பட்டு ஓவைசி மீது கோபமடைந்தேன்" என்று கூறுகிறார்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டில் அக்பருதீன் ஒவைசி,"பயப்படத் தேவையில்லை. இன்று, ஒரு முஸ்லிமிடம் என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள்? நான் இதைச் சொல்ல வேண்டும், நீங்கள் என் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். 800 ஆண்டுகள் நான் இந்த நாட்டை ஆண்டேன். இந்த நாடு எனக்குச் சொந்தமானது, என் முன்னோர்கள் இந்த நாட்டிற்கு கொடுத்தது சார்மினார், ஜமா மசூதி, மெக்கா மசூதி, குதுப்மினார், மேலும், இந்த நாட்டின் பிரதமர் மூவர்ணக்கொடியை ஏற்றிய செங்கோட்டையும் என் முன்னோர்களால்தான் உங்களுக்கு வழங்கப்பட்டது. . உங்களுக்கு ஆவணங்கள் வேண்டுமா? " என்று கூறியிருந்தார்.
கடந்த வாரம் ஹப்பூர் சுங்கச்சாவடியில் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அசாதுதீன் ஒவைசி, தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற நபர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை நடத்த வேண்டும் என்று கூறினார். தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பதிலளித்த ஓவைசி, தான் ஒரு 'சுதந்திர பறவை' என்றும், துப்பாக்கி ஏந்திய நபர்களால் சுற்றி வளைக்கப்பட விரும்பவில்லை என்றும் கூறினார்.