அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!

அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
Published on

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு மிகவும் வலுத்து வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் தெருவில் இறங்கிவிட்டார்கள். மாணவர் அமைப்புகள் போராட்டங்கள் வழிநடத்துகிறார்கள். அங்கு பல்வேறு பகுதிகளில் போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அசாம் மாநிலத்தில் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசாம் மக்கள் ஏன் இந்தக் குடியுரிமை சட்டத் திருத்தத்தை இவ்வளவு கடுமையாக எதிர்க்கின்றனர்?.

இந்தியாவில் வடகிழக்கும் மாநிலங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அதிலும், அசாம் மாநிலம் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க பல கலாச்சாரங்களை கொண்ட முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த மாநிலத்தில் அசாமி மொழி மற்றும் இந்தி மொழி பேசும் இந்துக்கள் வசிக்கின்றனர். அத்துடன், பல்வேறு பிரிவு பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். மேலும், 32 மில்லியன் இஸ்லாமியர்களும் வசிக்கின்றனர். இதனால் அங்கு வசிக்கும் பழங்குடியினர்கள் மற்றும் பிற மக்கள் இடையே அவ்வப்போது பதற்றம் நிலவும் சூழல் அசாமில் இருக்கும். 

மேலும், அசாம் மாநிலம் வங்கதேசத்துடன் 900 கிலோ மீட்டர் தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதனால் வங்கதேசத்திலிருந்து பணி மற்றும் மத ரிதியிலான துன்புறுத்தல் காரணமாக மக்கள் இங்கு குடிபெயர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 1979ஆம் ஆண்டு வங்கதேசத்திலிருந்து வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அங்குப் பெரிய கலவரம் வெடித்தது. அங்கு 6 ஆண்டுகளாக நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் கிட்ட தட்ட 885 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு, போராட்டக்காரர்களுடன் ‘அசாம் அக்கார்டு’ என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 

இந்த ஒப்பந்தத்தின்படி 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதிக்கு பிறகு வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கு உரிய ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா வந்தவர்கள் வெளிநாட்டவர் என்று கருதப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு பிறகு இந்தியாவிற்குள் வந்தவர்கள் கைது செய்யப்பட்டு மீண்டும் வங்கதேசத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. 

எனினும் இந்த ஒப்பந்தம் முறையாக பின்பற்ற படவில்லை என்று கூறி பல தரப்பட்ட அசாம் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும் 1951ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற ஆணையின்படி இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி புதிய தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது. 

இந்தப் புதிய குடிமக்கள் பதிவேட்டில் 1.9 மில்லியன் மக்களின் பெயர் இடம்பெறவில்லை. இதனாலும் அங்கு பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் தற்போது புதிதாக திருத்தப்பட்டுள்ள குடியுரிமை மசோதா இந்த அசாம் அக்கார்டில் கொடுக்கப்பட்டிருந்த 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி என்பதற்கு மாறாக 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியாக கணக்கிட்டுள்ளது. 

இதனால் 1971ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவிற்குள் வந்த மக்கள் குடியுரிமை பெற முடியும். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது முதல் அசாம் மாநிலத்தில் போராட்டம் வலுவடைந்துள்ளது. ஏற்கனவே தங்களது வேலைவாய்ப்பு, கலாச்சாரம் ஆகியவை பறிபோவதாக அவர்கள் அச்சத்தில் இருந்தனர். தற்போது, இந்த சட்டத்தின் மூலம் ஏராளமானோர் புதிதாக தங்கள் மாநிலத்திற்கு வரவாய்ப்புள்ளதாக மக்கள் கருதுகின்றனர். அதனால், மேலும் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதே அவர்கள் மத்தியில் நிலவும் அச்சம். 

அத்துடன் அசாம் அகார்டின் பிரிவு 6ல் அசாம் மக்களின் இனம் மொழி கலாச்சாரம் ஆகிய அனைத்தும் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை தற்போது இயற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்தம் மீறும் வகையில் உள்ளதால் அந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக, இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற அடிப்படையிலே குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் நிலைமையே வேறு. அவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, எல்லா தரப்பு ஊடுருவல் காரர்களையும் வேண்டாம் என உறுதியுடன் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com