பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணங்களாக மத்திய அரசு சொல்வது என்ன என்பதைப் பார்க்கலாம்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் துணை அமைப்புகளும் சட்டவிரோதமானவை என்று அறிவித்துள்ள மத்திய அரசுக்கு, அவற்றுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. தடைக்கான காரணங்கள் குறித்தும் தெரிவித்துள்ளது.
1. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் துணை அமைப்புகளும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. மதக்கலவரங்கள் மற்றும் வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. வன்முறையில் ஈடுபட ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும், பிரதமரை தாக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் ஆயுதங்கள் - வெடிபொருட்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள் குறித்து மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
4. ஹிஜாப், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 ஆவது பிரிவு ரத்து உள்ளிட்ட விவகாரங்களில் அரசுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் துணை அமைப்புகளும் போராட்டங்களை ஒருங்கிணைத்ததாக மத்திய அரசு கூறியுள்ளது.
5. இந்தியன் முஜாஹிதீன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்ளை போல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் துணை அமைப்புகளும் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.