‘தமிழர்களிடம் வாடகை வசூலிக்கக் கூடாது’ - கேரள அரசு
கேரளாவில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத தமிழ் குடும்பத்தினர் புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொள்வாயலல் கிராமத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 48 தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. மரம் வெட்டும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் ஊரடங்கால் தற்போது வருமானம் இன்றி உள்ளனர். ஊரடங்கு என்பதால் கேரள அரசு தொழிலாளர்கள் யாரிடமும் வீட்டு வாடகை வசூலிக்க வேண்டாம் என ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர், வாடகை தருமாறு அவர்களை நிர்பந்தம் செய்ததாக தெரிகிறது. முதியவர் ஒருவர் தங்கியிருந்த வீட்டின் கதவை பூட்டிவிட்டு உரிமையாளர் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் வருவாய் இல்லாமல் உணவுக்கே மிகவும் கஷ்டப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்த செய்தி புதிய தலைமுறையில் வெளியானதை அடுத்து, காசர்கோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தமிழர்களிடம் வாடகை வசூல் செய்ய வேண்டாம் என வீட்டு உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து 48 தமிழ் குடும்பங்களும் அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் அம்மாநில அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்