தேசிய கட்சி அங்கீகாரத்தை இழக்கும் முக்கிய கட்சிகள்..? காரணம் இதுதான்..!

தேசிய கட்சி அங்கீகாரத்தை இழக்கும் முக்கிய கட்சிகள்..? காரணம் இதுதான்..!
தேசிய கட்சி அங்கீகாரத்தை இழக்கும் முக்கிய கட்சிகள்..? காரணம் இதுதான்..!
Published on

திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தேசிய கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான கூட்டம் தேர்தல் ஆணையத்தில் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த மூன்று கட்சிகளும் கடந்த மக்களவைத் தேர்தலில் சரியாக சோபிக்கவில்லை. ஏனென்றால் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் பிரதான கட்சியாக இருந்து வருகிறது. எனினும் மணிப்பூரில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிப் பெற்றது. அத்துடன் அங்கு 1.4% வாக்குகளை மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் பெற்றது. 

அதேபோல அருணாச்சலப் பிரதேசத்தில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. மேலும் 2016-ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலில் 4.9 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றது. ஆனால் அங்கு ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெல்லவில்லை. திரிபுரா மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெறும் 0.3% வாக்குகள் மட்டுமே பெற்றது. ஆகவே திரிணாமுல் கட்சி தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் 6 சதவிகித வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இந்திய கம்யூனிஸ் கட்சி கேரளா மாநிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்துள்ளது. மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்த 6 சதவிகித வாக்குகள் நிபந்தனையை எந்த மாநிலத்திலுமே பூர்த்தி செய்யவில்லை. ஆகவே இந்தக் கட்சிகளின் தேசிய அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. 

ஒரு கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற 3 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்கவேண்டும். முதலாவதாக, நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளில் தலா 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இரண்டாவதாக, நாடாளுமன்றத் தேர்தலில் மொத்த உள்ள தொகுதிகளில் 2 சதவீத இடங்களை(11 இடங்கள்) 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றி பெற வேண்டும். மூன்றாவதாக, ஒரு அரசியல் கட்சி  4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். 

இந்த நிபந்தனைகளை அரசியல் கட்சிகள் பூர்த்தி செய்தால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியாக அறிவிக்கப்படும். இந்த நிபந்தனைகள் அனைத்தும்  5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடக்கும் தேர்தல்களின் முடிவுகளை வைத்து கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனை 2016 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் திருத்தியுள்ளது. அதன்படி தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிபந்தனைகள் அடிப்படையில் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கவுள்ளது. 

இந்தியாவில் தற்போது காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மேகாலயாவின் தேசிய மக்கள் கட்சி ஆகிய 8 கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. மேகாலயாவின் தேசிய மக்கள் கட்சி கடந்த ஜூன் மாதம் தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றது. இந்தக் கட்சி மேகலாயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட 4 மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com