நவீன இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது கொண்ட பாசத்தால், அவரின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு, உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1889ஆம் ஆண்டு பிறந்தார். செல்வந்தரின் மகனான நேரு, காந்தியின் கொள்கைகள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால், மேற்கத்திய ஆடைகள் அணிவதைத் தவிர்த்து, கதர் உடைகளையே உடுத்தினார். காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, அவரது வழிகாட்டுதலில் சுதந்திரப் போராட்டங்களை முன்னெடுத்தார். 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம், 1945ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். வாழ்நாளில் 9 ஆண்டுகள் சிறையில் கழித்தபோது, உலக வரலாற்றின் காட்சிகள், சுயசரிதை, இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார்.
1947 ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதும், நாட்டின் முதல் பிரதமராக நேரு நியமிக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றும் தனிப்பெருமையும் அவருக்கு வழங்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றிய ஜவஹர்லால் நேரு, நவீன இந்தியாவை உருவாக்கிய பெருமைக்குரியவர். இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்த நேரு, அதற்கேற்ப உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார். மிக சக்தி வாய்ந்த வெளியுறவுக் கொள்கைகளால், நவீன இந்தியாவை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றினார்.
1947 ஆண்டு முதல், 1964ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை பிரதமர் பதவியில் இருந்தார் ஜவஹர்லால் நேரு. குழந்தைகள் மீது அவர் செலுத்திய அன்பினால் நேரு மாமா என அழைக்கப்பட்டார். 1949-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி, குழந்தைகளை விளித்து நேருஜி எழுதிய கடிதமே, அவர் குழந்தைகள் மீது கொண்டிருந்த அன்பை பறைசாற்றியது. நேருவின் எண்ணங்களை குழந்தைகளிடம் சேர்க்கும் விதமாகவே அவரது பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதி, குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.