2019 ஆம் ஆண்டில் புதிய உச்சங்களை தொட்டு சாமானிய மக்களை அதிர வைத்தது தங்கம் விலை. இந்நிலையில் 2020ம் ஆண்டில் அதன் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தங்கத்தின் விலை அண்மைக்காலமாக சுமார் 5 முதல் 10% வரை ஆண்டுதோறும் உயர்ந்து வந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டில் சுமார் 20% அதிகரித்தது. ஆண்டுத் தொடக்கத்தில் 24 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை விறுவிறுவென உயர்ந்து ஆண்டின் இறுதியில் 30 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் நிறைவடைந்தது. ஒரே ஆண்டில் சவரனுக்கு 6 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை வேகமாக உயரும் போக்கு 2020ம் ஆண்டும் தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் சந்தை நிபுணர்கள்.
இந்த ஆண்டு தங்கம் விலை 10 கிராமுக்கு அதிகபட்சமாக 45 ஆயிரம் ரூபாய் அதாவது சவரனுக்கு 36 ஆயிரம் ரூபாய் வரை உயரும் என பண்டக சந்தை ஆய்வு நிறுவனமான காம்டிரெண்ட்ஸ் கணித்துள்ளது. தங்க நகை வணிகத்தில் உள்ளவர்களும் இதே கருத்தை எதிரொலிக்கின்றனர்.
தங்க நகை வணிகத்தில் அடுத்த திருப்பமாக ஹால் மார்க் நடைமுறை வரும் 15-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன் மூலம் நகையின் தரத்தை உறுதிப்படுத்த அவற்றுக்கு ஹால்மார்க் முத்திரையை நகை வணிகர்கள் பெறுவது கட்டாயமாக உள்ளது. இந்த முடிவு தங்க நகை வணிகத்தில் ஒழுங்குமுறையை ஏற்படுத்த உதவும் எனக் கூறுகிறது உலக தங்க கவுன்சில். ஹால்மார்க் கட்டாயமாவதை வரவேற்கும் நகை வணிகர்கள் நகைகளை ஆய்வு செய்து ஹால்மார்க் முத்திரையிடும் மையங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
ஏற்ற இறக்கம் நிறைந்த சர்வதேச பொருளாதார சூழலில் சாமானியர்கள் முதல் அரசாங்கங்கள் வரை நம்பகமான முதலீடு என கருதியது தங்கத்தையே. இனி வரும் காலங்களிலும் தங்கம் தன் முக்கியத்துவத்தை தக்க வைத்துக்கொள்ளும் என்பதே தற்போதைய சூழல்கள் உணர்த்தும் உண்மையாக உள்ளது