அடுத்தடுத்து பின்னடைவுகள்... நீர்த்துப் போகிறதா விவசாயிகள் போராட்டம்?!

அடுத்தடுத்து பின்னடைவுகள்... நீர்த்துப் போகிறதா விவசாயிகள் போராட்டம்?!
அடுத்தடுத்து பின்னடைவுகள்... நீர்த்துப் போகிறதா விவசாயிகள் போராட்டம்?!
Published on

விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறை சம்பவம், அவர்களின் இரண்டு மாத போராட்டத்தில் ஒரு கருப்புப் புள்ளியாக மாறியுள்ளது. வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், விவசாயிகள் தரப்பில், `வன்முறை விவசாயிகளின் இயக்கத்தை இழிவுபடுத்துவதற்கான திட்டமிட்ட சதி' என்று கூறி, இந்த வன்முறைக்குப் பின்னால் ஏதேனும் வெளிப்புற சக்திகள் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், இந்த வன்முறையால் இப்போது விவசாயிகள் போராட்டத்தில் அடுத்தடுத்து பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. முதலாவதாக, டிராக்டர் பேரணியைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலின்போது நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி ஒரு பேரணி நடத்த விவசாய சங்கங்களின் முக்கியமான அமைப்பும், 'டெல்லி சலோ' போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்புகளின் ஒன்றான சம்யுக்தா கிசான் மோர்ச்சா திட்டமிட்டிருந்தது. ஆனால், நேற்று முன்தினம் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை, அவர்களின் மனதை மாற்றவைத்துள்ளது.

ஆம், இப்போது பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தை நோக்கிய பேரணியை சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய விவசாய சங்கத் தலைவர்களின் ஒருவர், ``நாடாளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணி நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், எங்கள் போராட்டம் தொடரும், ஜனவரி 30 அன்று நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்கள் நடைபெறும். குடியரசு தின வன்முறை ஒரு சதி. அந்த சதியை உடைப்போம்.

வன்முறைக்கு காரணமாக அறியப்படும் நடிகர் தீப் சித்து அரசாங்கத்தின் ஏஜென்ட். சீக்கியர்களின் மதக் கொடியான நிஷான் சாஹிப்பை செங்கோட்டையில் ஏற்றியதன் பின்னணியில் அவர் இருக்கிறார். செங்கோட்டை நடந்த சம்பவங்களுக்கு கிஷான் மோர்ச்சா சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

இதேபோல், ஸ்வராஜ் இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவ், ``வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு, மோர்ச்சா தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது" எனக் கூறியிருக்கிறார்.

பி.கே.யு (ராஜேவால்) தலைவர் பல்பீர் சிங் ராஜேவால், ``தொண்ணூறு சதவீத விவசாயிகள் இந்த அணிவகுப்பை அமைதியாக நடத்தினர். ஆனால், கிசான் சங்கர்ஷ் மஜ்தூர் கமிட்டியின் பணியாளர்கள் மட்டும் முன்னணியில் சென்றனர். அவர்கள் ஒரு தனி வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போதிய எதிர்ப்பும் இல்லை" என்று சங்கர்ஷ் மஜ்தூர் கமிட்டி மீது சந்தேகம் கிளப்பினார். இவரைப் போலவே, கிரந்திகாரி கிசான் யூனியன் தலைவர் தர்ஷன் பால் என்பவரும், வன்முறைக்கு காரணமாக, கிசான் சங்கர்ஷ் மஜ்தூர் கமிட்டி மீது சந்தேகம் கிளப்பினார். இப்படி பல சங்கங்கள், கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியை வன்முறைக்கு காரணம் என கைகாட்டின.

ஆனால், கிசான் மஜ்தூர் தலைவர் சத்னம் சிங் பன்னோ, செங்கோட்டை சம்பவத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், "இரண்டு மூன்று விவசாய தொழிற்சங்கங்கள் கிசான் மஜ்தூர் பெயரை இந்த சம்பவத்துக்குள் தொடர்புபடுத்துகின்றன. ஆனால், செங்கோட்டை சம்பவத்தில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. நாங்கள் ரிங் சாலையோடு போராட்டத்தில் இருந்து திரும்பிவிட்டோம். நாங்கள் மற்ற தொழிற்சங்கங்களுக்கு எதிராக எதுவும் சொல்லப்போவதில்லை. நாங்கள் சம்யுக்தா கிசான் மோர்ச்சா உடன் ஒருங்கிணைந்து இருக்கிறோம். மேலும், மோர்ச்சாவின் பிற அழைப்புகளையும் செயல்படுத்துவோம். எங்கள் போராட்டம் தொடரும்.

நாங்கள் ஒருபோதும் செங்கோட்டையை ஆக்கிரமிக்க எந்த அழைப்பையும் கொடுக்கவில்லை. கலவரம் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட அனைவரின் நடவடிக்கைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம். மோர்ச்சாவில் உள்ள விவசாயிகள் தலைவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு, எங்களை பிளவுபடுத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.

விவசாய சங்கங்களில் பிளவு?

இந்தக் குளறுபடிகளை மத்தியில் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி மற்றும் பாரதிய கிசான் சங் (பானு) என்ற இரு விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இருந்து வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளன.

கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி வி.எம்.சிங் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதுடன், பி.கே.யு (டிக்கைட்) தலைவர் ராகேஷ் டிக்கைட்டைக் குறிப்பிட்டு, ``இவரைப் போன்று போராட்டத்தை வேறு திசையில் கொண்டு செல்ல விரும்பும் ஒருவர் உடன் போராட்டத்தை தொடர்ந்து ஆதரிக்க முடியாது. குறைந்தபட்ச ஆதரவு விலை பிரச்னை தொடரும் வரை விவசாயிகளின் இயக்கம் தொடரும். ஆனால், இந்த வழியில் அல்ல. வன்முறைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்களைக் கொல்லவும், தாக்குதல் நடத்தவும் நாங்கள் இங்கு வரவில்லை. மேலும், முரண்பட்ட கொள்கை கொண்ட ஒருவருடன் சேர்ந்து போராட முடியாது. அவர்களுக்கு நல்லது நடக்கட்டும்" என்று கூறினார்.

இதேபோல், பாரதிய கிசான் சங்கத்தின் ஒரு பிரிவும் இந்தப் போராட்டத்தில் இருந்து தாங்கள் விலகுவதாக அறிவித்துள்ளது. பாரதிய கிசான் சங் (பானு) பிரிவின் தாக்கூர் பானு பிரதாப் சிங், சில்லா எல்லையில் தங்கள் முற்றுகையை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். பி.கே.யு (பானு) தலைவர், பானு பிரதாப் சிங், ``வன்முறை நிகழ்வுகளால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன், நாங்கள் 58 நாட்களாக அங்கமாக இருந்த இந்தப் போராட்டத்திலிருந்து தற்போது விலகிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

இதற்கிடையே, குடியரசு தின வன்முறை எஃப்.ஐ.ஆர்களில் விவசாய சங்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் என 2000 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுத்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

முதல்கட்டமாக டெல்லி வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றவர்களுக்கு டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நபர், எந்தவொரு விமான நிலையத்திலும் அனுமதிக்கப்படமாட்டார் என்பதால், எஃப்.ஐ.ஆரில் பெயர் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும்படியாக காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் பறிமுதல் செய்யவும் டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளனர். டெல்லி டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பான விசாரணை இவ்வாறாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையை மத்திய அரசு இனி தொடர்வது சந்தேகமே என்ற நிலையில் நீடிப்பதால், டெல்லி வன்முறை சம்பவத்தால் போராடும் விவசாயிகளுக்குப் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதேவேளையில், மீண்டும் சரியான பாதையில் போராட்டத்தை முன்னெடுக்க விவசாயிகள் தீவிரம் காட்டி வருவதும் கவனிக்கத்தக்கது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com