"கொரொனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து இருக்க வேண்டும் எனக் கூறும் மத்திய அரசு, இணையதள சேவை இல்லாத ஒரு சாமானியர் அதை எப்படி செய்வார் என்ற கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை" என உச்சநீதிமன்றம் மத்திய அரசை சாடியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள உச்ச நீதிமன்றம் ஆக்சிஜன் தட்டுப்பாடு மருந்துகள் பற்றாக்குறை தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கெனவே கடந்த முறை வழக்கு விசாரணை நடைபெற்ற போது தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தேசிய அளவிலான திட்டத்தை உருவாக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒரு விலைக்கு வாங்கி அதனை வேறொரு விலைக்கு மாநில அரசுகளுக்கு ஏன் வழங்க வேண்டும் எதற்காக இந்த இரட்டை கொள்கை முடிவு" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், "45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தாங்கள் கொள்முதல் செய்த விலையில் தடுப்பூசி வழங்குகிறது 45 வயதிற்கு கீழானவர்களுக்கு 50 சதவீதம் பேருக்கு மாநில அரசுகளுக்கும் மீதமுள்ள 50 சதவீதம் பேருக்கு தனியார் மருத்துவமனைகளுக்கும் தடுப்பூசிகளை மத்திய அரசு வேறு விலையில் வழங்குகிறது. ஏன் இந்த பாகுபாடு நாடுமழுவதும் ஏற்பட்டிருக்கக் கூடிய ஒருமித்த பிரச்னையில் தடுப்பூசிகளின் விலை மட்டும் ஏன் வெவ்வேறாக இருக்க வேண்டும்" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
"விலை பிரச்னை ஒரு புறம் இருந்தால் மற்றொரு பிரச்னை இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவு. அலைபேசியை இணையதள சேவையை இல்லாத ஒரு கிராமத்தை சேர்ந்த சாமானியர் இதை எப்படி செய்ய முடியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் வேண்டும் என்றால் நேரடியாக தடுப்பூசி மையங்களுக்குச் சென்று முன்பதிவு செய்யலாம் என கூறுகிறீர்கள் இது நடைமுறையில் சாத்தியம் தானா டிஜிட்டல் இந்தியா என கூறும் மத்திய அரசு கள நிலவரத்தை புரிந்து கொள்ளவில்லை" என நீதிபதிகள் கடுமையாக சாடினர்.
"அதிலும் நிறைய குழப்பங்கள் இருக்கிறது 18 வயது முதல் 45 வயது வரையிலான அவர்களுக்கு முன் பதிவு செய்யக்கூடிய பகுதி திடீரென இல்லாமல் போய்விடுகிறது இது பெருத்த குழப்பங்களை ஏற்படுத்துகிறது உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? கொரோனா இரண்டாவது அலையில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில் அவர்களுக்கு தடுப்பூசியில் முக்கியத்துவம் வழங்காதது ஏன்" எனவும் கேள்வி எழுப்பினார்.
நீதிபதிகளின் இந்த கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதை சொல்வதற்கான காரணம் முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்கள் இரண்டாவது டோசை சரியாக எடுத்துக் கொள்கிறார்களா என்பதை கவனிக்க தான் எனினும் இது குறித்து விரிவாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதற்கு காலஅவகாசம் வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.