ஜார்க்கண்ட்டில் பாரதிய ஜனதாவுக்கு ஏன் தோல்வி ஏற்பட்டது என்பது குறித்து சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பழங்குடியினர் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலம் உருவாகி சுமார் 19 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதில் சுமார் 15 ஆண்டுகள் பாஜகவே இம்மாநிலத்தை ஆண்டுள்ளது. இதிலிருந்தே ஜார்க்கண்ட்டில் பாஜகவி்ன் வலிமை அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில் தனது பிரதான எதிரியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் அதன் கூட்டணிகளிடம் இம்முறை தன் அரியணையை பறிகொடுத்துள்ளது பாஜக.
பழங்குடியினர் நிறைந்த மாநிலத்தில் பழங்குடியினர் அல்லாத ரகுபர் தாஸை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியது அதன் பின்னடைவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் பரப்புரையில் ராமர் கோயில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடிமக்கள் பதிவேடு போன்ற தேசிய அளவிலான அம்சங்களை பரப்புரையில் பாஜக மையப்படுத்திய நிலையில் எதிர் தரப்பில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி உள்ளூர் அம்சங்களை மட்டுமே பிரதானப்படுத்தி வாக்கு சேகரித்தது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணிக்கு சவாலான வகையில் வலுவான கூட்டணியை பாஜக அமைக்க தவறியதும் அதன் தோல்விக்கு ஒரு காரணமாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இவற்றோடு வழக்கமாக தேர்தல்களில் நிலவும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையும் சேர்ந்து கொண்டது பாஜக ஆட்சியை இழக்க காரணமாகிவிட்டது என்கின்றனர் அம்மாநில அரசியல் குறித்து அறிந்தவர்கள்.