மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்துக்கு பிரதமர் பதிலளிக்கக் கோரி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி வருகின்றன. இத்தனை காலம் வன்முறை நீடித்தும் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை காக்க தவறிய அந்த மாநில முதல்வர் பிரேன் சிங், பதவியில் இருந்து நீக்கப்படாதது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங்கை அக்காட்சியின் தலைமை பதவி நீக்கம் செய்தால் அந்தக் கட்சி மாநிலத்தில் சரியாக ஆட்சி நடத்தவில்லை என்ற விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் என்று காரணம் சொல்லப்படுகிறது.
மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தியும், நிலைமை காட்டுக்குள் வராததும், பாரதிய ஜனதா அமைதியாக இருப்பதற்கு காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது. ஏற்கனவே கடும் குழப்பம் மணிப்பூர் மாநிலத்தில் நிலவிவரும் இந்த நேரத்தில், முதல்வரை மாற்றுவது அரசியல் ரீதியிலாக சிக்கலை ஏற்படுத்தும். அது நிலைமையின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் என்பது பாரதிய ஜனதா கட்சி தலைமை நடவடிக்கை எடுக்காததற்கு காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.
மேலும் முதல்வர் பிரேன் சிங் மணிப்பூரின் பெரும்பான்மை சமூகமான மெய்த்தி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை நீக்குவதன் மூலம் மெய்த்தி சமூகத்தின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும் என்ற எண்ணமும் காரணமாக அரசியல் பார்வையாளர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது.
இவ்விவகாரம் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கூறுகையில், ''மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் ஒருசார்பு நடவடிக்கைகள்தான் இத்தனை பிரச்னைக்கும் காரணம். பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மெய்த்தி சமூகத்தினருக்கு ஆதரவாகவும், சிறுபான்மையாக இருக்கக்கூடிய குக்கி இன மக்களுக்கு எதிராகவும் அவர் செயல்படுகிறார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுவதால் அவரையும் அவரது அரசையும் நீக்கிவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. இரட்டை என்ஜின் அரசு என்று பாஜகவினர் கூறுவார்கள். ஒரு என்ஜின் (மாநில அரசு) முழுமையாக பழுதடைந்து விட்டது. பழுதான மாநில அரசை மாற்ற பாஜக ஏன் தயங்குகிறது?'' என்று கேள்வியெழுப்புகிறார் அவர்.