நவி மும்பை அருகே, ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள் காரணமாக, நாய்கள் நிறம் மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவி மும்பை அருகே உள்ளது தலோஜா தொழிற்பேட்டை பகுதி. இங்குள்ள உணவு, மருத்துவம், என்ஜினீயரிங் தொழிற்சாலை கழிவுகள், கசாடி ஆற்றில் கொட்டப்படுகிறது. சாயக்கழிவுகளும் இந்த ஆற்றில் கலப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகப் புகார் கூறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆற்றை நீந்தும் நாய்கள், சமீப காலமாக நிறம் மாறி திரும்புகின்றன. வெள்ளை நிறம் கொண்ட நாய்கள் ஆற்றுக்குள் சென்றுவிட்டு கரை ஏறினால், நீல நிறமாக மாறிவிடுகிறது.
இதுபற்றி விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த அரதி சவுகான் என்பவர் புகார் கொடுத்துள்ளார். ‘சுமார் 5 நாய்கள் இப்படி நிறம் மாறி வந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தோம். இதுபற்றி மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் தெரிவித்து குறிப்பிட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுள்ளோம். இந்த தண்ணீர், மனிதர்களுக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றார் அரதி.