அரசியலுக்கு வரவேண்டாம் என அமிதாப் பச்சன் தனக்கு அறிவுரை கூறினார் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருப்பது விவாதப் பொருளாகியுள்ளது. ரஜினிகாந்துக்கு அமிதாப் பச்சன் இப்படி ஒரு அறிவுரையை வழங்க காரணம் என்ன ? தெரிந்துக்கொள்ளலாம்.
பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன். இந்திய திரையுலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் கொண்டாடப்படும் கலைஞன். சினிமாவில் உச்சத்தில் இருந்த அமிதாப் பச்சன் அரசியலிலும் தன் கால்தடத்தை பதித்திருக்கிறார். நேரு குடும்பமும் அமிதாப் பச்சன் குடும்பமும் நீண்ட காலம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தன. இதனால் சிறுவயதிலேயே ராஜீவ் காந்தியும், அமிதாப் பச்சனும் நெருங்கிய நண்பர்களாகினர். இந்த நட்பு தான் அமிதாப் பச்சனை அரசியலுக்கு அழைத்து வந்தது. அமிதாப் பச்சன் திரையுலகில் உச்சத்தில் இருந்த காலம் அது. அவரை முழு நேர அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என நேரு குடும்பம் விரும்பியது.
இது அமிதாப்புக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த அவர், சிறிது காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து அரசியலுக்கு வந்தார். 1984ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் தொகுதியில் முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சர் ஹெ.என். பஹுகுணாவை எதிர்த்து போட்டியிட்டார். திரையுலகை போலவே அரசியலிலும் மாபெரும் வெற்றி கிடைத்தது. அந்த தேர்தலிலேயே அதிகபட்ச வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமை அமிதாப்புக்கு கிடைத்தது. 68.21 சதவிகித வாக்குகளை பெற்றார். இதுவரை எந்த வேட்பாளராலும் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை. ஆனால் அந்த அரசியல் வாழ்க்கை மூன்று ஆண்டுகளிலேயே அஸ்தமனமாகிவிட்டது.
போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் அமிதாப் பச்சனுக்கும் அவரது சகோதரருக்கும் தொடர்பிருப்பதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட அது பூதாகரமானது. இதனை எதிர்கொள்ள தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அமிதாப் பச்சன். பின்னாளில் அவர் குற்றமற்றவர் என நீதிமன்றமே கூறியது. ஆனால் இந்த கசப்பான அனுபவம் அரசியல் ஒரு சாக்கடை என அவரையே கூற வைத்தது. பின்னாளில் அமிதாப்பச்சன் தொடங்கிய அமிதாப்பச்சன் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனம் நஷ்டத்தில் இருந்தது. அப்போது சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவராக இருந்த அமர் சிங், அமிதாப் பச்சனுக்கு மிகப்பெரிய உதவியை செய்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் அமிதாப்பை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சி நடந்தது. ஆனால் அமிதாப் அதனை ஏற்க மறுத்தார். இதனைத்தொடர்ந்து அவரது மனைவி ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து எம்.பி.ஆனார். நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் சமாஜ்வாதி கட்சிக்கு அமிதாப் தனது ஆதரவை அளித்து வருகிறார். தேர்தலின் போது அலகாபாத் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முடியாமல் போனதே தான் வாழ்நாளில் மிகவும் வருத்தப்படும் விஷயம் என பேட்டி ஒன்றில் அமிதாப்பச்சன் கூறியுள்ளார். மிகப்பெரிய வெற்றியுடன் அரசியலில் அடியெடுத்து வைத்த அமிதாப்புக்கு, பதவி விலகும் அளவுக்கு நெருக்கடிகள் தரப்பட்டன. கசப்பான அனுபவங்களால் அமிதாப்பின் அரசியல் மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
அரசியலில் நுழையும் முடிவினை மிகவும் உணர்ச்சிபூர்வமாக எடுத்தேன் ஆனால் அரசியலில் உணர்வுகளுக்கு இடமில்லை என அறிந்து, அவ்வாறு என்னால் இருக்க முடியாது என்பதால் விலகினேன் என அமிதாப் ஒரு முறை தன்னுடைய முடிவு குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். இன்றைய கணினி உலகில் அரசியல்வாதிகள் மீது கிண்டல்கள், கேலிகள், அவதூறுகள், குற்றச்சாட்டுகள் என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வருகின்றன. தனது நீண்ட நாள் நண்பரான ரஜினியும் இதுபோன்ற புகாருக்கு ஆளாக வேண்டாம் என்ற நோக்கிலும், தனது அனுபவங்கள் ரஜினிக்கு ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும் அமிதாப் அறிவுரை கூற காரணமாக அமைந்திருக்கலாம்.