கேரளாவில் தன்னுடைய தாயின் மறுமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இளைஞரின் ஃபேஸ்புக் பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இன்றளவும் மறுமணம் என்பது அவ்வளவு எளிதில் நடக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. அதுவும் பெண்களுக்கு மறுமணம் என்பது இன்னும் சிரமம்தான். மறுமணம் செய்து கொள்ளலாம் என ஒரு பெண் நினைத்தாலும், சமூகத்தில் உள்ளவர்கள் எப்படி பார்ப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு அதற்காக தனது எண்ணத்தை கைவிட்டு விடுவார்கள்.
இந்நிலையில்தான், கேரளாவைச் சேர்ந்த கோகுல் ஸ்ரீதர் என்ற இளைஞர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய தாயின் மறுமணம் குறித்து ஒரு பதிவை எழுதியுள்ளார். எழுத தொடங்கும் போதே தாயின் மறுமணம் குறித்து பேசுவதில் தனக்குள்ள தயக்கத்தை குறிப்பிட்டுள்ளார்.
23 வயதான கோகுல் தற்போது கொல்லத்தில் இன்ஜினியராக உள்ளார். கோகுல் பத்தாம் வகுப்பு இருக்கும் போது, வீட்டில் கொடுமை தாங்க முடியாமல் அவருடைய தாய் அவரை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். அவரது தாய் ஒரு ஆசிரியராக இருக்கிறார். தாயுடன் கோகுல் வசித்து வந்துள்ளார். நீண்ட வருடங்களுக்குப் பின்னர் அவரது தாய்க்கு மறுமணம் நடந்துள்ளது. மறுமணம் செய்து கொண்ட தன்னுடைய தாய்க்கு வாழ்த்து தெரிவித்து, ஃபேஸ்புக் பதிவை உருக்கமாக எழுதி இருந்தார்.
கோகுல் தன்னுடைய பதிவில், “இது என்னுடைய தாயின் திருமணம். இதுபோன்ற பதிவை எழுதுவதற்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. மறுமணம் என்பது பலருக்கும் இன்னும் விலக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது.
எனக்காக தன்னுடைய வாழ்க்கையை என் தாய் தியாகம் செய்து வந்துள்ளார். அவருடைய திருமண வாழ்க்கையில் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வந்தார். ஒருமுறை கடுமையாக தாக்கப்பட்டு தலையில் ரத்தம் வழிய இருந்த என்னுடைய தாயை பார்த்தேன். ஏன் இன்னும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என அவரிடம் கேட்டேன். அப்போது, உனக்காக தான் வாழ்கிறேன் என அவர் சொன்னது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. எனக்காக தன்னுடைய இளமையையும், கனவுகளையும் அவர் விலக்கி வைத்தார். இதற்கு மேல் எனக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இதனை ஒரு ரகசியமாக வைத்திருக்க விரும்பவில்லை.
ஒவ்வொரு முறை மறுமணத்தைப் பற்றி என்னுடைய தாயிடம் கூறும் போதெல்லாம், அவர் தொடர்ந்து மறுத்து வந்தார். ஆனால், அவர் உடன் பணி செய்பவர் மூலமாக இந்தத் துணை அமைந்தது. முதலில் அவர் மறுத்தாலும், பின்னர் மறுமணத்திற்கு ஒப்புக் கொண்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கோகுல் ஸ்ரீதரின் இந்த நேர்மையான முடிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அவருடைய இந்த ஃபேஸ்புக் பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.