இன்று என் தந்தை உயிரிழந்தார்; நாளை யார் தந்தையோ? என காவலர் சுபோத் குமார் சிங்கின் இளைய மகன் அபிஷேக் வருத்தம் தெரிவித்துள்ளார்
உத்திரப்பிரதேச புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் பசுக்கள் சடலங்கள் கிடப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து, கிராமத்திற்குள் ஒன்றுதிரட்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு சாலைகளை மறித்தனர். இந்தப் போராட்டம் குறித்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் உள்ளூர் போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். போராட்டத்தை கட்டுப்படுத்தவும், சாலை போக்குவரத்தை சீர்செய்யவும் முயற்சி செய்தனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திடீரென அப்பகுதியில் உள்ள சிலர், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, காவல் நிலையத்திற்கும் சென்று அவர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்ததை அடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
இந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதலில் அவர் பேராட்டக்காரர்களின் கல்லெறித் தாக்குதலுக்கு உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் மீது போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது. அதேபோல், போராட்டத்தில் ஈடுபட்ட 18 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.
இந்நிலையில் தன் தந்தையின் மறைவு குறித்து காவலர் சுபோத் குமார் சிங்கின் இளைய மகன் அபிஷேக் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், ''என் தந்தை என்னை ஒரு நல்ல குடிமகனாக உருவாக்கவே விரும்பினார். மதத்தாலும், இனத்தாலும் பிரிவினைகள் இருக்கக்கூடாது என அவர் விரும்பினார். ஆனால் அந்த மத ரீதியிலான பிரச்னையையே என் தந்தையின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது. இன்று என் தந்தை உயிரிழந்தார்; நாளை யார் தந்தையோ? அவர் உயிரிழப்பதற்கும் ஒருநாளைக்கு முன்னதாக என்னிடம் பேசினார். என் படிப்பில் கவனம் கொள்ளச்சொன்னார்'' என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த காவலர் சுபோத் குமார் சிங்குக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டுமென உத்திரப்பிரதேச அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்