கோயம்பேடு சந்தையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில் இந்த தற்காலிக சந்தையில் காய்கறிகளை ஏற்றி வரும் கனரக வாகனங்களுக்காக பிரத்யேகமாக சாலைகள் அமைக்கப்பட்டது. அந்த சாலைகள் அனைத்தும் மண் சாலைகளாக இருப்பதால் கனரக வாகனங்கள் காய்கறிகளை ஏற்றி வரும் போது சந்தை முழுவதும் புழுதி பறந்து புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது.
சிமெண்ட் கலந்த இந்த மண் பரப்பதனால் சுகாதார சீர்கேடும், வியாபாரிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த தற்காலிக மொத்த சந்தையில் மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சில்லறை வியாபாரிகள் அனுமதிக்கபடுவதில்லை.
ஆனால் இந்த சந்தையை சுற்றிலும் விவசாய நிலங்கள் அதிகமாக இருப்பதால் உள்ளூர் மக்கள் சிலர் கூட்டம், கூட்டமாக இரவு மற்றும் பகல் நேரங்களில் சந்தைக்கு வருகின்றனர் எனப் புகார் எழுந்துள்ளது.
சிலர் காய்கறி மூட்டைகளில் இருந்து காய்கறிகளை எடுத்துச் செல்வதாகவும், அவ்வாறு எடுத்துச் செல்லும் காய்கறிகளை சிலர் விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அத்துமீறி உள்ளே நுழைந்து காய்கறிகளை எடுத்துச் செல்லும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சாலைகளை சீரமைத்து தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக விரைந்து தங்களை கோயம்பேடு மார்கெட்டிற்கே செல்ல ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.