கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் ஆட்சியை பாரதிய ஜனதா தக்க வைக்குமா, காங்கிரஸ் கைப்பற்றுமா அல்லது தொங்கு சட்டசபையா என நண்பகலுக்குள் தெரிய வரும். இந்தத்தேர்தலில் கர்நாடக மாநிலத்தின் கல்யாண கர்நாடகா முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது. அதன் பின்னணியையும் அங்குள்ள வாக்குவங்கி நிலவரத்தையும் இங்கே பார்ப்போம்...
கர்நாடகாவில் உள்ள 6 மண்டலங்களில் கல்யாண கர்நாடகாவும் ஒன்று. அப்பகுதியில் காங்கிரஸின் கை ஓங்கியுள்ள நிலையில் அதற்கு கடும் சவாலை கொடுத்து வருகிறது ஆளும் பாரதிய ஜனதா.
கர்நாடக மாநிலத்தின் வடகிழக்கு பகுதியே கல்யாண கர்நாடகா என அழைக்கப்படுகிறது. ஹைதராபாத் நிஜாம் ஆட்சி செய்த பகுதிகளை கொண்டுள்ளதால் அப்பெயரை கொண்டே ஹைதராபாத் கர்நாடகா என அப்பகுதி அழைக்கப்பட்டது. பின்பு அதன் பெயர் கல்யாண கர்நாடகா என மாற்றப்பட்டது. நாட்டின் வறட்சி மிகுந்த பகுதிகளில் ஒன்றான இப்பகுதி, கர்நாடகாவிலேயே மிகவும் பின்தங்கிய பகுதியாகவும் உள்ளது. பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் இப்பகுதியில் அதிகமாக உள்ளனர். கலபுரகி, பெல்லாரி, பிதார், ராய்ச்சூர் என முக்கியமான ஊர்களை கொண்ட இப்பகுதியில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன.
இங்கு கடந்த 3 தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது காங்கிரசின் கையே ஓங்கியிருந்தது.
* 2008 தேர்தலில் இங்கு பாஜக 19 இடங்களிலும் காங்கிரஸ் 15 இடங்களிலும் மஜத 5 இடங்களிலும் வென்ற நிலையில் பிற கட்சிகள் ஓரிடத்தில் வென்றிருந்தன.
* 2013 தேர்தலில் காங்கிரஸ் 23 இடங்களிலும் பாஜக, மஜத தலா 5 இடங்களிலும் வென்றிருந்தன. பிற கட்சிகள் 7 இடங்களில் வென்றிருந்தன.
* 2018இல் காங்கிரஸ் 21 இடங்களிலும் பாஜக 15 இடங்களிலும் இங்கு ஜெயித்திருந்தன. மஜத 4 இடங்களை கைப்பற்றியது.
கடந்த தேர்தலில் மாநிலமெங்கும் பாஜக அதிக தொகுதிகளை வென்றபோதும் கல்யாண கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியிருந்தது, இப்பகுதியில் அதன் ஆதிக்கத்தை காட்டுகிறது. கல்யாண கர்நாடகாவின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் ஒரு கோடி வீதம் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என உறுதியளித்துள்ளது காங்கிரஸ்.
பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம், குடும்பத் தலைவிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை போன்ற அறிவிப்புகள் தங்களுக்கு கைகொடுக்கும் என காங்கிரஸ் நம்புகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பகுதி என்பது அக்கட்சிக்கு சாதகமான அம்சமாக உள்ளது.
மறுபுறம் ஆளும் பாஜகவும் இலவச சிலிண்டர், இலவச பால் என பல்வேறு வாக்குறுதிகளுடன் வாக்கு அறுவடைக்காக விரிவான வியூகங்களை வகுத்து களமிறங்கியுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என பெரும் படையே இங்கு பரப்புரை செய்ய உள்ளது. கல்யாண கர்நாடகா மக்கள் ஆதரவு யாருக்கு என்பது இன்று தெரிந்துவிடும்.