சேது சமுத்திர திட்டம் முதலில் யார் சிந்தனையில் உதித்தது; 150 ஆண்டு கால சுவாரஸ்ய வரலாறு

சேது சமுத்திர திட்டம் முதலில் யார் சிந்தனையில் உதித்தது; 150 ஆண்டு கால சுவாரஸ்ய வரலாறு
சேது சமுத்திர திட்டம் முதலில் யார் சிந்தனையில் உதித்தது; 150 ஆண்டு கால சுவாரஸ்ய வரலாறு
Published on

சேது சமுத்திர திட்டம்தான் தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது. 150 ஆண்டுகளாகத் தொடரும் இந்த திட்டம் உருவான வரலாறு மற்றும் அத்திட்டத்தின் நன்மை, விமர்சனங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

சேது சமுத்திர திட்டம்!

பாக் ஜலசந்தியையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் அல்லது ராமர் பாலம் எனச் சொல்லக்கூடிய பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயே, சேது சமுத்திர திட்டம் ஆகும். இந்தத் திட்டம், 300 மீட்டர் அகலமும், 167 கி.மீ நீளமும், 12 மீட்டர் ஆழமும் கொண்டது.

இந்திய பெருங்கடலில் இருந்து புறப்படும் கப்பல்கள், இன்றுவரை இலங்கையைச் சுற்றிதான் சென்று வருகின்றன. அதாவது, அண்டை மாநில துறைமுகங்கள் அல்லது சர்வதேச நாடுகள் என அனைத்துக்கும் செல்லும் கப்பல்கள், இலங்கையை அடைந்தே பின்னேயே பயணிக்கின்றன. அவ்வாறு சுற்றிச் செல்லாமல் குறுக்கு வழியில் சென்று வங்கக்கடலை அடைய செய்யும் திட்டமே, சேது சமுத்திர திட்டம். இதனால், இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு இடையிலான 424 கடல் மைல் தூரம் வரை குறைவதுடன், பயண நேரமும் குறைய வாய்ப்பிருக்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில், அதாவது 1860ஆம் ஆண்டு ஏ.டி.டெய்லரின் சிந்தனையில் உதித்த இந்தத் திட்டம் அவருக்குப் பிறகு யாராலும் முன்னெடுக்கப்படவில்லை. அதன்பிறகு, 1955ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது ராமசாமி முதலியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிலும் சரி, அதைத் தொடர்ந்து, 1983ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது லட்சுமிநாராயணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிலும் சரி, இந்த திட்டத்துக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் எதுவும் எட்டப்படவில்லை. லட்சுமி நாராயணன் குழுவில் இந்த திட்டம் கொஞ்சம் முன்னெடுக்கப்பட்டபோதும் மாற்றுப் பாதை எனச் சொல்லப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

மதுரையில் மீண்டும் துவக்கம்!

இதைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு, பிரதமர் வாஜ்பாய் காலத்தில் சேது சமுத்திரத் திட்டம் கையிலெடுக்கப்பட்டது. அப்போது இத்திட்டத்திற்காக கொஞ்சம் நிதி ஒதுக்கப்பட்டு, வழித்தடங்களும் ஆராயப்பட்டன. இறுதியில் அதுவும் கைவிடப்பட்டு, 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது இதற்கான திட்டம் மீண்டும் தொடங்கப் பெற்றது. 2005ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி மதுரையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்கள் இதில் பங்கேற்று இத்திட்டத்தை மீண்டும் துவக்கிவைத்தனர்.

இதற்கான வேலைகள் சென்றுகொண்டிருந்த வேளையில்தான், இதை எதிர்த்து எதிர்ப்புகளும் அந்தச் சமயத்தில் வரத் தொடங்கின. இத்திட்டத்தால் மீன் வளம் பாதிக்கப்படும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும், அதற்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகண்டிருந்த நேரத்தில்தான், மதரீதியான கருத்துகள் எழத் தொடங்கின. ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிசத், ’இத்திட்டத்தின்மூலம் ராமர் பாலத்தைச் சேதப்படுத்த விட மாட்டோம்’ எனக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியது. இதனால் அப்போதிய ஆளும் திமுக அரசின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதுபோன்ற தொடர்ச்சியான மோதல் மற்றும் எதிர்ப்புகளால் சேது சமுத்திர திட்டம் கடந்த 2007ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.

அதன்பிறகு இத்திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து மீண்டும் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் ’இது சரிப்பட்டு வராது’ என்கிற நிலையில்தான் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அதேநேரத்தில், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராய்ப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவும், இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ’ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்’ என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, இந்த திட்டம் பேசுபொருளானது. ’ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படுத்தாத வகையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவோம்’ என பாஜக கூறியது.

இந்து அமைப்புகள் வாதம்!

அதேநேரத்தில், சேது சமுத்திர திட்டம் என்கிற பேச்சு எழும்போதெல்லாம், ராமர் பாலம் விவகாரமும் இத்துடன் சேர்ந்துவிடுகிறது. பொதுவாக இந்து அமைப்புகள், ‘ராமர் கட்டிய காலம் இங்கு உள்ளது. அதாவது, ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு இடைப்பட்ட 56 கிலோ மீட்டரில் சுண்ணாம்புப் பாறைகள் ஆங்காங்கே இடைவெளிவிட்டு காணப்படுகின்றன. அது, ஆடம்ஸ் பாலம் என அழைக்கப்படுகிறது. இதுதான் ராமர் பாலம் என கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதாவது, இந்த மேடு நிறைந்து காணப்படும் சுண்ணாம்புப் பாறைகளைச் சுத்தப்படுத்திவிட்டாலே, இலங்கையைச் சுற்றிவர வேண்டிய அவசியம் இருக்காது. இதை அகற்றக்கூடாது என்பதுதான் இந்து அமைப்புகளின் வாதமாக இருக்கிறது.

ராமர் பாலம் குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருமுறை ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “ராமர்னு ஒருத்தர் இருந்ததாகவோ, அவர் இஞ்னியரிங் படித்ததாகவோ அவர் ஒரு பாலம் கட்டியதாகவோ சரித்திரத்தில் இல்லை” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் ’மத்திய அரசு இந்த சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான் ஹரியானா எம்.பி. கார்த்திகேயா சர்மா, ’சேது சமுத்திர திட்டத்தின் ஆய்வுகள் எந்த அளவில் இருக்கின்றன’ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங், ”அங்கு எந்த கட்டுமானங்களும் தெரியவில்லை; அதனால், அது ராமர் பாலம்தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்தப் பதிலுக்குப் பிறகுதான் தமிழகத்தில் சேது சமுத்திர திட்டத்திற்கு மீண்டும் ஆதரவு பெருகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்!

இதையடுத்துத்தான் ’சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனிநபர் தீர்மானம், அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக கடந்த ஜனவரி 13ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. குறிப்பாக அதிமுகவும், பாஜகவும் இதற்கு ஆதரவு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய பாஜகவின் சட்டமன்றக் குழுவின் தலைவரான நயினார் நாகேந்திரன், ‘ராமேஸ்வரம் என்பது நீரோட்டம் அதிகமுள்ள பகுதி. அதனால், அங்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, ராமர் பாலத்தை எதுவும் செய்யாமல், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் வரவேற்போம்’ எனத் தெரிவித்திருந்தார்.

சேது சமுத்திர திட்டத்தால் நன்மைகள்!

இத்திட்டம் நிறைவேறினால் குறுகிய நாட்களில் கப்பல் வருவதன் மூலம் தொழிற்சாலை முதலாளிகளுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும். தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சியடைவதுடன் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் கொடிகட்டி பறக்கும்; வருமானமும் அதிகரிக்கும். சர்வதேச அளவில் வர்த்தகம் உயரும். அதனால் உள்நாட்டுத் முதலாளிகளுக்கு பல கோடி ரூபாய் அளவில் லாபம் கிடைக்கும். தவிர, உள்நாட்டில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெருகும். இதையடுத்தே இத்திட்டத்தை அரசும், அரசியல் கட்சிகளும் முழுமையாக ஆதரிக்கின்றன எனச் சொல்லப்படுகிறது.

சேது சமுத்திர திட்டத்தின் தீமைகள்!

அதேநேரத்தில், இத்திட்டத்தால் மீன் வளமும், மீனவர்களும் பாதிக்கப்படுவர். குறிப்பாக, பாம்பன், தங்கச்சிமடம். தனுஷ்கோடி இராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க இயலாமல் தொழிலையே இழக்க நேரிடும் எனச் சொல்லப்படுகிறது. அதோடு இத்திட்டத்தின்போது பிளாஸ்டிக் பைகள் கடலில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் 12 வகை மீன் இனங்கள் அழியும் வாய்ப்பு உருவாகும். மேலும் கால்வாய் வழி செல்லும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் அபூர்வ கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும். உயரினங்கள் மட்டுமின்றி கடல்வாழ் தாவரங்களும் கருகிவிடும் வாய்ப்புள்ளது. அத்துடன், ஆபூர்வமான பவளப் பாறைகள் அழியும்போது, கடலரிப்பு ஏற்பட்டு கடல் மட்டம் உயர்வதுடன், பருவ மாற்றம் நிகழ்ந்து மழை அளவும் குறையும்; புயல் வீசும் அபாயமும் ஏற்படும்” என கடல் வள ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ஜெ.பிரகாஷ், இரா.செந்தில் கரிகாலன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com