காங்கிரஸின் புதிய தலைவர் யார்? மாறி, மாறி கைகாட்டும் தலைவர்கள் - என்ன நடக்கிறது கட்சியில்?

காங்கிரஸின் புதிய தலைவர் யார்? மாறி, மாறி கைகாட்டும் தலைவர்கள் - என்ன நடக்கிறது கட்சியில்?
காங்கிரஸின் புதிய தலைவர் யார்? மாறி, மாறி கைகாட்டும் தலைவர்கள் - என்ன நடக்கிறது கட்சியில்?
Published on

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி,ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போது தயாராகி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு தீவிரம்காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தியின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.

கட்சி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட "தேசிய செயற்குழு" கூட்டம் சோனியா காந்தி தலைமையில் வருகிற 28-ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் தேசிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வெளிநாடு பயணம் மேற்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கட்சிக்கு புதிய தலைவரை தேர்வுசெய்ய வேண்டும் என ஏற்கனவே மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஜி-23 தலைவர்கள் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி மீண்டும் அந்த பதவியை ஏற்க வேண்டும் என மூத்த தலைவர்களான ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தியும் தலைவர் பதவியை நிச்சயமாக ஏற்க மாட்டேன் என மறுப்பு தெரிவித்து வருகிறார். உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வரும் சோனியா காந்தி இம்முறை கூடுதலாக தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் நிச்சயமாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு கட்டாயம். இந்த நிலையில் நேரு குடும்பத்தை சேராத மூத்த தலைவர்கள் சிலர் புதிய காங்கிரஸ் தலைவர் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார்கள்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், முன்னாள் சபாநாயகர் மீராகுமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுனா கார்கே, முகுல் வாஸ்னிக், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோரின் பெயர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது.

ஆனால் ப.சிதம்பரம் உள்ளிட்ட நேரு குடும்பத்தை சாராத யாரும் கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்கக்கூடாது. அவர்களை நாங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என ஆதிரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில்தான் வருகிற 28-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை மற்றும் தேர்தல் அட்டவணை என்பது அறிவிக்கப்பட இருக்கிறது.

இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்க ராகுல் காந்தி முன் வருவாரா? இல்லையென்றால் பிரியங்கா காந்தியா அல்லது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களா என்ற பெரும் குழப்பம் நிலவி வருகிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாக பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை அகற்றி வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிதாக யார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்? அவருடைய தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி எப்படி தேர்தலை சந்திக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

- விக்னேஷ் முத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com