புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் ரயில் செலவை யார் ஏற்பது என்பதில் தெளிவு வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொது முடக்கம் காரணமாகச் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், வேலையும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதனால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர். பலர் இன்னும் செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து பொது முடக்கத்திற்கு இடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகச் சிறப்பு ரயில்களை மாநில அரசுகளின் அனுமதியோடு மத்திய அரசு இயக்கியது. இவ்வாறு இயக்கப்பட்ட ரயில்களில் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் செலவை யார் ஏற்பது என்பதில் தெளிவு வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது.
இதற்குப் பதிலளித்த மத்திய அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் செலவை அவர்கள் கிளம்பும் மாநில அரசோ அல்லது சென்று சேரும் மாநில அரசோ ஏற்பதாகக் கூறியது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உணவு மற்றும் குடிநீர் ரயில்வே நிர்வாகம் சார்பில் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நாள்தோறும் 187 ரயில்கள் இயக்கப்படுவதாகவும், அதன்மூலம் 1.85 பேர் சொந்த ஊர் திரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர அருகிலுள்ள மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாள்தோறும் 3.36 லட்சம் பேர் என்ற கணக்கில் இதுவரை மொத்தம் 47 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்குச் சாலை போக்குவரத்து வழியாக அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.