இந்தியாவின் அடுத்த நிதி அமைச்சர் யார் ?

இந்தியாவின் அடுத்த நிதி அமைச்சர் யார் ?
இந்தியாவின் அடுத்த நிதி அமைச்சர் யார் ?
Published on

உடல் நலக்குறைவு காரணமாக தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றிப் பெற்றது. இதனையடுத்து நரேந்திர மோடி நாளை பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் முன்னாள் நிதி அமைச்சரான அருண் ஜெட்லி, தனக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் எனக் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த வாரம் எம்ய்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்‌பட்ட அருண் ஜெட்லி, வியாழக்கிழமை அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதனால் பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரால் பங்குபெற முடியவில்லை. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் பரவியது.

இந்நிலையில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நலமாக உள்ளார் என்றும், அவரது உடல்நிலை குறித்து வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் சிதான்ஷூ கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். ஊடகங்கள் வதந்திகளை பரப்பாமல், தெளிவாக செய்திகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள பதவிப் பிரமாணம் நிகழ்ச்சியில் ஏற்கெனவே அமைச்சராக உள்ள பலருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் புதியவர்கள் சிலரும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் பெறவுள்ள நிதி அமைச்சர் யார் என்று கேள்வி இப்போது எழுந்துள்ளது. இதில் இப்போது ரயில்வே துறை அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயல், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக துறை அமைச்சராக இருக்கும் சுரேஷ் பிரபு அல்லது பாஜக தலைவர் அமித் ஷா பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் அப்பதவியிலேயே தொடர்வார் எனத் தெரிகிறது. அவர் அத்துறைக்கு அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் புல்வாமா தாக்குதல் போன்றவை திறன்பட நடத்தப்பட்டது. இதில் பியூஷ் கோயல் இடைக்கால நிதி அமைச்சராக இருந்து 2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும், பியூஷ் கோயல் ஒரு ஆடிட்டர், அவர் சிஏ தேர்வில் இந்தியளவில் 2 ஆம் இடம் பிடித்தவர். இதனால் அவருக்கு நிதி விவரங்களில் வல்லவர். எனவே, பியூஷ் கோயலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதற்கடுத்து வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு நிதி அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கெனவே ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர். இவரும், ஒரு ஆடிட்டர்தான், நிதி தொடர்பான பல்வேறு கருத்தரங்களில் உலகளவில் பங்கேற்றவர். எனவே இவருக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 

இதற்கடுத்து பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் நிதி அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாகவே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பியூஷ் கோயல் மற்றும் சுரேஷ் பிரபு போலவோ அமித் ஷா நிதித் துறையில் வல்லவர் இல்லை, பிஎஸ்சி படித்தவர். இத்தகைய சூழலில் அமித்ஷா உள்துறை அமைச்சராக்கப்படலாம் என்ற பேச்சும் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com