பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இடம் பெற்றுள்ளார். அவருக்கு சுகாதாரம் மற்றும் ரசாயனத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2019ல் செயல் தலைவரான நட்டா, பின்னர் தேசியத் தலைவராக நீடிக்கிறார். மத்திய அமைச்சராகிவிட்டதால், அந்த பதவியில் யார் நியமிக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மக்களவை சபாநாயகராக பணியாற்றிய ஓம் பிர்லா மற்றும் பாஜகவின் ஓபிசி பிரிவு தலைவர் கே.லக்ஷ்மண் ஆகியோரின் பெயர்கள் ஆய்வில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2019 முதல் 2024 வரை மக்களவை சபாநாயகராக இருந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா.
மக்களவைக்கு புதிய சபாநாயகரை தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மூத்த தலைவர்களில் ஒருவரான ஓம் பிர்லா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கே. லக்ஷ்மணை தலைமைப் பதவிக்கு நியமிப்பதன் மூலம் ஓபிசி பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிப்பதை எடுத்துக்காட்ட முடியும் என ஒரு சாரார் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது.
கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்களான சுனில் பன்சால், ஓம் மாத்தூர், மற்றும் வினோத் தாவடே ஆகியோரின் பெயர்களும்பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு முன்னாள் மத்திய அமைச்சர்களும் இந்த பதவிக்கு போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்சியின் மூத்த தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களுமான சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மனோகர் லால் கட்டர் ஆகியோர் இந்த பதவிக்கு நியமிக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் இருவரும் மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெண் ஒருவரை தேசியத் தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு முடிவெடுக்கும்பட்சத்தில், அமேதி தொகுதியில் தோல்வியுற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும் எனவும் கருதப்படுகிறது.