மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், ஜனவரி 26-ல் நடந்த வன்முறைக்குப் பிறகு வலுவிழந்துவிடுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், அப்படி நடக்காமல் முன்பைவிட வலிமையாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூரில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம்தான் மத்திய அரசை கூடுதலாக திணறடித்து வருகிறது. இதற்குக் காரணமாக அறியப்படுபவர் ராகேஷ் திக்கைத்.
டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைக்கு பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பில், "வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படாவிட்டால் விவசாயிகளுக்காக எனது உயிரை மாய்த்துக்கொள்வேன்" என கண்ணீர் விட்டு அழுதார்.
கண்ணீருடன் கூடிய அவரின் பேச்சு குறித்து அந்த வீடியோ, எதிர்ப்பாளர்களிடம் மட்டுமல்ல... நாடு முழுவதும் உள்ள நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகியது. அவரின் உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை ஒன்றிணைக்க உதவியது. மேலும், உத்தரப் பிரதேத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ராகேஷ் திக்கைத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களை சேர்ந்த முழு விவசாய சமூகமும் தற்போது ஒன்றிணைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வளவு ஏன்... முசாபர் நகர் கலவரத்துக்கு பின் பிரிந்து இருந்த ஜாட் சமூக மக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றாக இணைந்து காசிப்பூர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 2013 முசாபர்நகர் கலவரத்திற்குப் பிறகு இரு சமூகங்களும் பிரிந்து சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஜாட் சமூக மக்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற பாக்பத் மாவட்டத்தின் பராத்தில், இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவு முதல் முறையாக, மகாபஞ்சாயத்து நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 25 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் செல்வாக்குமிக்க விவைஸ்யா தலைவர்களான தேஷ் காப் மற்றும் பாலியன் காப் ஆகியோர் மகாபஞ்சாயத்தில் ஒன்றாகக் காணப்பட்டனர். இப்படி போராடும் விவசாயிகளின் ஒற்றை முகமாக மாறியுள்ள ராகேஷ் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.
யார் இந்த ராகேஷ் திக்கைத்?!
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சிசவுலி நகரம்தான் ராகேஷ் திக்கைத்தின் பூர்விகம். இவரின் தந்தை மறைந்த மகேந்திர சிங் திக்கைத் பாரதிய கிஷான் யூனியன் உத்தரப் பிரதேச கிளையை நிறுவியவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் செல்வாக்கு மிகுந்த தலைவர் மகேந்திர சிங் திக்கைத். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் கரும்பு விவசாய மக்களின் இதயங்களில் இன்றளவும் 'ராஜா'வாக வாழ்ந்து வருபவர். அவர் வாழ்ந்த காலங்களில் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிட்டத்தட்ட 70 தொகுதிகளில் இவர் கைகாட்டுபவர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக முடியும் என்ற நிலை இருந்தது.
அப்பட்டபட்ட மகேந்திர சிங் திக்கைத்தின் மூத்த மகன், அதாவது ராகேஷ் திக்கைத்தின் மூத்த சகோதரர் நரேஷ் ராகேஷ்தான் தற்போதைய பாரதிய கிஷான் யூனியன் தேசியத் தலைவராக உள்ளார். ராகேஷ் திக்கைத் மீரட் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்று 1992-இல் டெல்லி காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிக்குச் சேர்ந்தார். பின்னர் சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வந்த நிலையில், 1993-1994-இல் செங்கோட்டையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது போலீஸ் பணியை விட்டு வெளியேறினார்.
பின்னர், அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, அதிகாரபூர்வமாக பி.கே.யூ-வில் இணைந்துகொண்டார். குறுகிய காலத்தில் அந்த சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஆனவர், 2018-ஆம் ஆண்டில், உத்தாரகண்டின் ஹரித்வாரில் இருந்து டெல்லி வரை கிசான் கிரந்தி யாத்திரையின் தலைவராக இருந்து விவசாயிகளை வழிநடத்தினார்.
தனது தந்தையை போல, விவசாய சங்கத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் அரசியலிலும் காலடி எடுத்து வைத்தார். 2007-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இவர் காத்தோலி தொகுதியில் காங்கிரஸ் ஆதரவோடு போட்டியிட்டார். ஆனால் ஆறாவது இடம் மட்டுமே அவரால் பிடிக்க முடிந்தது. 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், உத்தரப் பிதேசத்தில் உள்ள அம்ரோஹா மக்களவைத் தொகுதியில் இருந்து ராஷ்டிரிய லோக் தளம் சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவரால் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பெற முடிந்தது.
இந்தத் தருணத்தில்தான், ராகேஷ் சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் எதிர்ப்பின் முகமாக மாறிவிட்டார். ராகேஷின் பேச்சு போராடும் விவசாயிகளின் மன உறுதியை உயர்த்தியுள்ளது. வேளாண் தொழிற்சங்கங்களின் ஒரு சில பிரிவுகளையும் ஒன்றிணைக்க முடிந்தது. இப்படி விவசாயிகள் போராட்டம் வலுப்பெற காரணமாக இருந்த ராகேஷ் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருக்கிறார்.
2022-ல் உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அவரை அரசியல் கட்சிகள் வளைக்க ஆரம்பித்துள்ளன. டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) தலைவருமான மனீஷ் சிசோடியா போராட்ட களத்துக்கே சென்று அவரை சந்தித்துள்ளார். சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி) தலைவர் அகிலேஷ் யாதவ், ராகேஷுக்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அவருக்கு ஆதரவாக ஊடக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் ராகேஷ் களத்தில் இறங்குவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. "மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஜாட்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு தலைவராக ராகேஷை எதிர்க்கட்சிகள் காண்கின்றன" என்று மீரட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் முன்னாள் பேராசிரியர் ஆர்.கே.சிங் சிங் கூறியுள்ளார்.
மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஜாட் அரசியலில், குறிப்பாக முசாபர்நகர் தொகுதியில் இருந்து 2019 மக்களவைத் தேர்தலில் ஆர்.எல்.டி தலைவர் அஜித் சிங் தோல்வியடைந்த நிலையில், அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை ராகேஷ் நிரப்பியுள்ளார் என்றும், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ராகேஷ் ஒரு முக்கிய ஜாட் தலைவராக உருவெடுத்துள்ளார் என்றும் பாலியன் காப்பின் தலைவர் ரஞ்சீத் சிங் கூறியிருக்கிறார். ஆனால், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
- மலையரசு