வயநாடு தொகுதி | நாளை வேட்புமனுத் தாக்கல்.. முதல்முறையாக தேர்தல் களம்.. யார் இந்த பிரியங்கா காந்தி?

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நாளை அங்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்திஎக்ஸ் தளம்
Published on

வயநாடு மக்களவைத் தொகுதி| இடைத்தேர்தல் அறிவிப்பு

நடப்பாண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மீண்டும் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். மேலும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் வற்புறுத்தல் காரணமாக, அவரது அன்னையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி நின்று ஜெயித்த உத்தரப்பிரதேசத்தின் ராய்பரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், தாம் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே ராகுல் அபார வெற்றிபெற்றார். இதில் ராய்பரேலி தொகுதி எம்பி பதவியை தக்கவைத்துக் கொண்டு வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து அந்த தொகுதியாக காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்போது வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு, நவம்பர் 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

ராகுல், பிரியங்கா
ராகுல், பிரியங்காட்விட்டர்

காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படும் பிரியங்கா காந்தி

இதையடுத்து கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் களப் பணியாற்றி வருகின்றன. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகேரியும் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தேர்தல் களம் அங்கு சூடுபிடித்துள்ளது.

இதையும் படிக்க: காமன்வெல்த் 2026|பேட்மிண்டன், மல்யுத்தம் உள்ளிட்ட 9 விளையாட்டுகள் நீக்கம்! இந்தியாவுக்குப் பின்னடைவு

”வயநாட்டின் சிறந்த பிரதிநிதி பிரியங்கா” - ராகுல்

இந்த நிலையில், நாளை (அக்.23) பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அவா் வேட்புமனு தாக்கல் செய்யும்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே, பிரியங்காவின் தாயாா் சோனியா காந்தி, சகோதரா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் உடன் இருப்பாா்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, ”வயநாடு தொகுதியில் தனது சகோதரியைவிட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்ய முடியாது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வயநாடு மக்கள் என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர்.
ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

இதுதொடர்பான ராகுலின் எக்ஸ் பதிவில், “வயநாடு மக்கள் என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தியைவிட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. பிரியங்கா வயநாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்பவராகவும், நாடாளுமன்றத்தில் சக்திவாய்ந்த குரலாகவும் இருப்பார் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ரூ.26 லட்சம் மதிப்புள்ள பை| ஹமாஸ் தலைவர் யாஹியாவின் இறுதிநிமிட காட்சிகள்.. வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்!

யார் இந்த பிரியங்கா காந்தி?

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்தை சேர்ந்தவராக அறியப்படும் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தியின் மகள் ஆவார். இவர் ராகுலின் சகோதரியும் ஆவார். பிரபல தொழிலதிபர் ராபர்ட் வதோராவை திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில் அரசியலில் இருந்தே பிரியங்கா காந்தி விலகியே இருந்தார். ஒருகட்டத்திற்குப் பிறகு தாய் சோனியா காந்தி, சகோதரர் ராகுலின் தொகுதிகளுக்கு மட்டும் சென்றுகொண்டிருந்த பிரியங்கா காந்தி, 2004 முதல் தாயாருக்காக அவருடைய தொகுதியில் பிரசாரத்திலும் ஈடுபட்டார். அந்த ஆண்டு ராய்பரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தியின் பிரசார மேலாளராக, பிரியங்கா காந்தி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதன்பிறகு சகோதரர் ராகுலின் தொகுதியிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்திpt web

2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலத்தில் அனைத்து அரசியல் பிரசாரங்களிலும் ராகுல் காந்தி ஈடுபட்டபோது, ​​அமேதி மற்றும் ரேபரேலி உட்பட சுமார் பத்து தொகுதிகளின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி இருந்தார். தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராகவும் மாறினார். அதற்குப் பிறகு காங்கிரஸின் முகமாக அறியப்பட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் நேரத்தின்போது பிரசாரத்தில் ஈடுபட்டார்.

குறிப்பாக, இவருடைய அசுரத்தனமான பிரசாரத்தால் 2022இல் ஹிமாச்சல் பிரதேச தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு, பிரியங்கா காந்தியையும் எம்பியாக்க காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பினர். ஆனாலும், கை நழுவிப் போனது. சமூக வலைதளத்தில் எந்த நேரமும் சுறுசுறுப்பாய இயங்கும் பிரியங்கா காந்தி, நாட்டில் நசுக்கப்படும் சம்பவங்களுக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் அவர் முதல்முறையாக வயநாட்டில் போட்டியிட இருக்கிறார். அவர் வயநாட்டுக்கு வருவது புதிது அல்ல. ஏற்கெனவே சகோதரர் ராகுல் அங்கு போட்டியிட்டபோது அவருக்காகத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிக்க: தினம் ஒருவருக்கு ரூ.8 கோடி.. ட்ரம்புக்கு ஆதரவாக புதிய அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com