விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருகிறது என பலரும் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தாலும், முகாமிட்டிருந்த நெடுஞ்சாலைகளை காலிசெய்து இவர்கள் இல்லம் திரும்பிய பிறகு, அங்கே உணவருந்திக் கொண்டிருந்த ஏழை மக்களுக்கு பசி தீர்க்க போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் எல்லைகளை முற்றுகையிட்டு வேளாண் சங்கத்தினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஒரு வருட காலமாக, எல்லைப்பகுதிகளில் கூடாரங்களை அமைத்து தங்கி, அங்கேயே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் தவிர அங்கேயே தயாரிக்கப்பட்ட உணவு அந்தப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள், குறிப்பாக குழந்தைகள், உள்ளிட்டோருக்கும் பசியாற்றும் சேவையை செய்து வந்தது. சென்ற வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், பல சிறுவர், சிறுமிகள் தினந்தோறும் போராட்டக் களத்தில் தங்கள் நேரத்தை கழிப்பது மட்டுமல்லாமல் தங்களுடைய பசியையும் தீர்த்துக் கொண்டார்கள்.
"லங்கர்" என்று சொல்லப்படும் சீக்கிய குருத்வாரா உணவைப் போலவே, விவசாயக் கூடாரங்களில் தயாரிக்கப்பட்ட உணவு தினந்தோறும் அங்கே கூடிய பலருக்கும் பசியாற்றியது. நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள், பால் ஆகியவற்றின் மூலம் தினந்தோறும் உணவு தயாரித்து பரிமாறப்பட்டது. போராட்டக்களத்தில் காலை முதல் மாலை வரை எல்லா நேரங்களிலும் உணவு தயாராக இருக்கும் என்பதே பலரையும் வியக்க வைக்கும் அம்சமாக இருந்து வந்தது.
தற்போது ஒரு வருடத்துக்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கூடாரங்களை அகற்றி தங்களுடைய கிராமத்துக்கு புறப்படும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் முடிவுக்கு வருகிறது என பலரும் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தாலும், முகாமிட்டிருந்த நெடுஞ்சாலைகளை காலிசெய்து இவர்கள் இல்லம் திரும்பிய பிறகு, அங்கே உணவருந்திக் கொண்டிருந்த ஏழை மக்களுக்கு பசி தீர்க்க போவது யார்?, இனி பல ஏழை மக்கள், குறிப்பாக குழந்தைகளின் உணவுக்கு என்ன வழி? என்பதே தற்போதைய கேள்விக்குறி.