செய்தியாளர் : ராஜீவ்
“டெல்லி மக்கள் மீண்டும் தம் மீது நம்பிக்கை வைத்து தேர்தெடுக்கும் வரை முதலமைச்சர் நாற்காலியில் அமரபோவதில்லை” என காணொளி மூலம் மக்களுக்கு தெரிவித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பால், டெல்லி அரசின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர்கள் அமைச்சர்களான கோபால் ராய், அதிஷி மற்றும் சவுரவ் பரத்வாஜ். இவர்கள்தான், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது அரசின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டவர்கள்.
அதேவேளையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பெயரும் முதலமைச்சருக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம். இருப்பினும், அவர் இதுவரை அரசியல் ரீதியான பொறுப்பு எதுவும் இல்லாததால் அவருக்கான வாய்ப்பு குறைவு என கருதுகின்றனர். எனவே, அனுபவம் மிக்கவர்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் சொல்கின்றனர். அந்த வகையில், அமைச்சர் அதிஷி முதலமைச்சராக்கப்படலாம்.
2020 தேர்தலில்தான் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர். தற்போது நீர்வளத்துறை, கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சர். அடுத்ததாக சவுரவ் பரத்வாஜ். தொடக்கம் முதல் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பயணித்து வருகிறார்.
உணவு, போக்குவரத்து, சுற்றுலா, பொது நிர்வாகம் என பல்வேறு துறைகளை அமைச்சராக இருக்கிறார். இவரை தொடர்ந்து அமைச்சர் கோபால் ராய் பெயரும் அடிபடுகிறது. இவர் தற்போது சுற்றுச்சூழல், வனம் ஆகிய துறைகளின் அமைச்சராக செயல்படுகிறார். லக்னோ பல்கலைக்கழகத்தில் பயிலும் போது அரசியல் போராட்டங்களை நடத்தியவர்.
ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தின் மூலம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார். எனவே, அனுபவமும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமுமான இந்த 3 நபர்களில் ஒருவர்தான் டெல்லி முதலமைச்சராக அறிவிக்கப்படலாம் என்று ஆம் ஆத்மி அலுவலக வட்டாரங்கள் பேசி கொள்கின்றன.